காரும் இல்ல.. வழியும் இல்ல..! 3 மணி நேரம் கல், முள்ளில் நடந்த புதுப்பெண்… கலங்க வைக்கும் உண்மை… வைரலாகும் திருமண வீடியோ…!!

By Gayathri on ஐப்பசி 24, 2026

Spread the love

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மலைக்கிராமப் பகுதியான சக்ராத்தாவைச் சேர்ந்த ஷர்மிளா என்ற மணப்பெண்ணுக்கும், அனில் என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. ஜவுன்சார்-பாவர் பகுதியின் பாரம்பரிய வழக்கப்படி மணப்பெண் தனது வீட்டிலிருந்து மாப்பிள்ளை வீட்டிற்கு ஊர்வலமாகச் செல்ல வேண்டும். ஆனால், மணமகன் வசிக்கும் உண்டாவா கிராமத்திற்கு முறையான சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாததால், மணப்பெண் தனது திருமணக் கோலத்திலேயே உறவினர்களுடன் பல கிலோமீட்டர் தூரம் சுமார் இரண்டரை முதல் மூன்று மணி நேரம் நடைபயணமாகச் செல்ல வேண்டிய சூழல் உருவானது.

திருமண உடையில் மலைப்பாதையில் மணப்பெண் சிரமப்பட்டு நடந்து செல்லும் இந்த நெகிழ்ச்சியான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. பல தலைமுறைகளாகத் தொடரும் கலாசாரத்தை இது ஒருபுறம் பிரதிபலித்தாலும், இன்றளவும் நாட்டின் பல கிராமங்களில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் எட்டாக்கனியாகவே இருப்பதை இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது என நெட்டிசன்கள் வருத்தத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

   

இதனைத் தொடர்ந்து, தங்களது கிராம மக்கள் படும் இன்னல்களை முடிவுக்குக் கொண்டுவர உடனடியாக சாலை வசதிகளை அமைத்துத் தருமாறு உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியிடம் அந்த மணப்பெண் கோரிக்கை வைத்துள்ளார். தமக்கு நேர்ந்த இந்த நிலை மற்றவர்களுக்கு வரக்கூடாது என்றும், குறிப்பாக அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் போக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.