கள்ளக்காதலா? பணத் தகராறா?… ‘ரெட் சூட்கேஸ்’ மர்மம்… கொதிக்க வைக்கப்பட்ட சடலம்… வெளிவந்த அதிர்ச்சி பின்னணி…!!

By Gayathri on ஆவணி 22, 2026

Spread the love

ஆக்ராவில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் அனாதையாகக் கிடந்த சிவப்பு நிற பெட்டியில் பெண்ணின் உடல் பாகங்கள் துண்டு துண்டாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த பெட்டியில் சென்னை துணிக்கடையின் பை இருந்ததால், கொலை அங்குதான் நடந்திருக்கலாம் என ஆக்ரா காவல்துறை சந்தேகித்து சென்னை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சென்ட்ரல் ரயில் நிலைய சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில், ஆணும் பெண்ணும் அந்த பெட்டியை ரயிலில் வைத்துவிட்டுத் தப்பிச் சென்றது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, சென்ட்ரல் முதல் செங்கல்பட்டு வரை உள்ள சுமார் 350 சிசிடிவி கேமராக்களை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர்.

கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் சந்தேக நபர்கள் கூடுவாஞ்சேரி சென்றதை அறிந்த போலீசார், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வாடகை வீடுகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு குறிப்பிட்ட வீட்டில் வீசிய கடுமையான துர்நாற்றத்தை வைத்து உள்ளே சென்று சோதனை செய்தபோது, அங்கு பெண்ணின் உடல் பாகங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் கிடந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். மேலும், ஒரு பெரிய பாத்திரத்தில் காய்கறிகள் மற்றும் மாவுடன் சேர்த்து மீதமுள்ள உடல் பாகங்கள் கொதிக்க வைக்கப்பட்டிருந்த கொடூரமும் அந்த சோதனையில் வெளிச்சத்திற்கு வந்தது.

   

விசாரணையில், கொல்லப்பட்ட பெண் தாம்பரத்தைச் சேர்ந்த 38 வயதான ஹைதுல் நிஷா என்பது தெரியவந்தது. தனது நடத்தையால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகனைப் பிரிந்து வாழ்ந்து வந்த இவர், ஒடிசாவைச் சேர்ந்த மாணிக் லஸ்கர் மற்றும் பகபதி மாஜி என்ற தம்பதியினருடன் அந்த வீட்டில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வடமாநில நபருடன் இருந்த தகாத உறவு அல்லது பணத் தகராறு காரணமாக இந்தக் கொடூரக் கொலை நடந்திருக்கலாம் என முதற்கட்டமாகச் சந்தேகிக்கும் போலீசார், தலைமறைவாக உள்ள ஒடிசா தம்பதியைத் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.