புழல் சிறைக்குள் நடந்த பகீர் சம்பவம்… பிரபல ரவுடி தலைக்கு ‘1 கோடி’ விலை… வெள்ளைக்காளியை துரத்தும் மரண பீதி… பரபரப்பு பின்னணி…!

By SATHISH R on ஆடி 6, 2026

Spread the love

சென்னை புழல் மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி வெள்ளைக்காளியை, சக கைதிகளே சிறைக்குள் வைத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் தமிழக காவல்துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த வெள்ளைக்காளிக்கும், மற்றொரு தரப்பான வீ.கே.குருசாமி தரப்புக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் பழிக்குப்பழி வாங்கும் மோதல் போக்கின் தொடர்ச்சியாகவே இந்த கொலை முயற்சி அரங்கேறியுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெள்ளைக்காளியின் ஆதரவாளர்களால் ‘கிளாமர்’ காளி என்ற காளீஸ்வரன் படுகொலை செய்யப்பட்டதற்குப் பழிவாங்கவே இந்த சதித்திட்டம் தீட்டப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த கொலை திட்டத்தின் பின்னணியில் கும்பகோணத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி லாலி மணிகண்டன் செயல்பட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சிறையில் வெள்ளைக்காளியை ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் தீர்த்துக்கட்டுவதற்காக சுமார் 1 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டு, அதில் முன்பணமாக 25 லட்சம் ரூபாய் கைமாறிய அதிர்ச்சித் தகவலும் வெளிவந்துள்ளது. சிறைக்குள் இருந்த சக கைதிகள் திடீரென வெள்ளைக்காளி மீது தாக்குதல் நடத்த முயன்றபோது, சுதாரித்துக் கொண்ட சிறைத்துறையினர் பெரும் அசம்பாவிதம் நடப்பதற்குள் தடுத்து நிறுத்தினர்.

   

இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, வெள்ளைக்காளியைக் கொல்ல திட்டம் தீட்டிய 4 கைதிகளைப் பிடித்து தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறைக்குள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கியதால், முதன்மைச் சதிகாரரான ரவுடி லாலி மணிகண்டன் உடனடியாக சேலம் மத்திய சிறைக்கும், அவருக்கு உடந்தையாக இருந்த மற்ற 3 கைதிகள் கடலூர் சிறைக்கும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இவர்களின் இந்த மோதல் போக்கால் இதுவரை இருதரப்பிலும் 21 கொலை சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

   

ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு போலீஸ் காவலில் அழைத்துச் செல்லப்பட்டபோதும் மர்ம நபர்கள் வெள்ளைக்காளியைக் கொலை செய்ய முயன்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காகவே அவர் வேலூர் சிறையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், தற்போது சிறை வளாகத்திற்குள்ளேயே ஒரு கோடி ரூபாய் அளவிற்குப் பேரம் பேசப்பட்டு கொலை முயற்சி நடந்துள்ளது சிறைத்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த பெரும் கேள்விகளையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.