தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் சபரி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குள் நெஞ்சை பதறவைக்கும் துயரச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் பணிபுரிந்து வந்த சிரிஷ் என்ற நபருக்கு, அங்கு நீலாவணி என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சிரிஷ் தன் மனைவியைப் பிரிந்து, காதலியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்த விவகாரம் சிரிஷின் மனைவிக்குத் தெரியவரவே, அவர் கோயம்புத்தூருக்கு நேரில் சென்று பஞ்சாயத்து பேசி, கணவனையும் அவரது காதலியையும் சமாதானப்படுத்தி மீண்டும் ஹைதராபாத்திற்கு அழைத்து வந்துள்ளார். இதற்காக அவர்கள் மூவரும் சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளனர்.
ரயில் செகந்திராபாத் நிலையத்தை வந்தடைவதற்குச் சரியாக 5 நிமிடங்களுக்கு முன்பு, சிரிஷ் மற்றும் நீலாவணி ஆகிய இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த விஷத்தை திடீரெனக் குடித்தனர். ரயில் பிளாட்பாரத்தில் நின்றதும், விஷத்தின் வீரியத்தால் இருவரும் மயங்கி விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிரிஷின் மனைவி ரயிலுக்குள் அலறியுள்ளார். பயணிகளின் சத்தத்தைக் கேட்டு விரைந்து வந்த ரயில்வே போலீசார், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், குடும்பத் தகராறு மற்றும் கள்ளத்தொடர்பு காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலே இந்த தற்கொலை முயற்சிக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
