இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சண்முகபாண்டியன் நடித்துள்ள “கொம்பு சீவி” திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் விளம்பரத்திற்காகச் சென்னையில் உள்ள ஒரு தியேட்டருக்கு சண்முகபாண்டியன் வருகை தந்திருந்தார். அப்போது அங்கு வந்திருந்த கேப்டன் விஜயகாந்தின் தீவிர பெண் ரசிகை ஒருவர், தனது பச்சிளம் பெண் குழந்தைக்குப் பெயர் சூட்டுமாறு சண்முகபாண்டியனிடம் உருக்கமாகக் கேட்டுக்கொண்டார். முதலில் சற்றுத் தயங்கிய சண்முகபாண்டியன், பிறகு தனது தந்தை விஜயகாந்த் மற்றும் தாய் பிரேமலதா ஆகிய இருவரின் பெயர்களையும் இணைத்து, அந்தக் குழந்தைக்கு “விஜயலதா” என்று அழகாகப் பெயரிட்டார்.
இதைக் கேட்டு உற்சாகமடைந்த ரசிகர்கள் திரையரங்கில் ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சண்முகபாண்டியன், தனது தந்தை விஜயகாந்தின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கத் தனக்கு மிகுந்த ஆர்வம் இருப்பதாகவும், அதற்கேற்ற சரியான இயக்குநர் கிடைத்தால் நிச்சயம் அந்தப் படத்தில் நடிப்பேன் என்றும் தெரிவித்தார். கேப்டனைப் போலவே தோற்றம் மற்றும் குணத்தில் மிளிரும் சண்முகபாண்டியனின் இந்தச் செயல், விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
