90 களில் கமல்ஹாசன் பல பரிசோதனை முயற்சி படங்களாக நடித்துக் கொண்டிருந்தார். அதனால் அவரின் பல படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெறாமல் தோல்வி அடைந்தன. ஆனால் காலம் சென்று அந்த படங்கள் இன்றும் கல்ட் கிளாசிக் படங்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன.
ஆனால் 90 களில் கமலுக்கு மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றியாக அமைந்த படம் இந்தியன். ஷங்கர் இயக்கத்தில் கமலுடன் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, செந்தில் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, ஏ எம் ரத்னம் தயாரித்திருந்தார். அப்போதைய சூழலில் தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் உருவான படமாக இந்தியன் உருவாகியிருந்தது.
சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்ற தியாகி ஒருவர், சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் நடக்கும் லஞ்சம், ஊழல் போன்ற பிரச்சனைகளுக்கு எதிராக வெகுண்டெழுந்து போராடுகிறார். இந்த ஊழல் படிந்த நாட்டில் தன் மகனும் ஒரு குற்றவாளியாக இருப்பதையறிந்து அவனையும் களையெடுக்கிறார். இப்படி ஒரு கதையை மிகப் பிரம்மாண்டமாக இரு காலகட்டங்களில் உருவாக்கி இருந்தார் ஷங்கர். இந்த படத்தின் வெற்றி எந்தளவுக்கு என்றால் அதற்கு முன்னர் வெளியாகி வசூலில் கலக்கிய பாட்ஷாவின் வசூலை முந்தியது. அப்போதைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் அதிக வசூல் செய்த படமாக அமைந்தது.
இந்த படம் பற்றி ஒரு நேர்காணலில் இயக்குனர் ஷங்கர் பேசியுள்ளார். அதில் “நான் இந்தியன் படத்தை ரஜினி சாருக்காக எழுதினேன். ஆனால் அது நடக்கவில்லை. அதன் பின்னர் கமல் சாருக்காக மாற்றினேன். அவர் நடித்தார். ஆனாலும் ரஜினி சாருக்காக சில காட்சிகள் எழுதியிருந்தேன். அதை நீக்காமல் வைத்திருந்தேன். அப்படி ஒரு காட்சிதான் இண்டர்வெல் காட்சி.
அந்த காட்சியில் கமல் சார் வேகமாக சிபிஐ அதிகாரியைத் தாக்கிவிட்டு கலைந்திருக்கும் முடியை ஸ்டைலாக கோதவேண்டும். முடியைக் கோதுவதென்றாலே அது ரஜினி சாரின் ஸ்டைல் என்பதுதான் அனைவரும் அறிந்தது. இந்தக் காட்சியை கமல் சார் எப்படி நடிக்க போகிறார் என ஆர்வத்தோடு காத்திருந்தேன். அவர் அதை செய்த போது ஒரு சதவீதம் கூட ரஜினி சார் தெரியவில்லை. அவ்வளவு அழகாக கமல் செய்திருந்தார். அதனால்தான் அவர் உலகநாயகன்” என பாராட்டி பேசியுள்ளார்.