தமிழ் சினிமாவின் வியாபார எல்லையைப் பெருக்கியவர்களில் ஒருவர் இயக்குனர் ஷங்கர். அவர் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த நிலையில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 கமர்ஷியல் இயக்குனராக அறியப்பட்டார். ஆனால் சமீபகாலமாக அவர் இயக்கிய ஐ, 2.0 மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்கள் அவரது முந்தையப் படங்களின் வெற்றியைப் பெறவில்லை.
அதிலும் இந்தியன் 2 திரைப்படம் கடுமையான கேலிகளுக்கு ஆளாகியுள்ளது. சமூகவலைதளங்களில் அந்த படத்தை அக்குவேறு, ஆணிவேராகக் கிழித்து தொங்கவிட்டுக் கொண்டிருக்கின்றனர். இத்தனைக்கும் ஷங்கர் தன்னுடைய படங்களில் ஊழல் எனும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பதே காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து அவர் தெலுங்கில் கேம்சேஞ்சர் படத்தை இயக்கி, அதை பேன் இந்தியா ஸ்டிக்கர் ஒட்டி விற்கப்பார்த்தார். ஆனால் அந்த படமும் பப்படம் ஆனது. இதனால் ஷங்கர் இப்போது தன்னையே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார் என்று கருத்துகள் எழுந்துள்ளன.
மேலும் தமிழைத் தவிர வேறு மொழிகளில் அவர் படம் எடுபடாது எனவும் சொல்லப்படுகிறது. இதற்கு சரியான உதாரணம் அவர் இயக்கிய இந்தி படமான ‘நாயக்’ படுதோல்வி அடைந்தது என்றும் விமர்சனங்கள் எழ அதற்கு ஷங்கர் பதில் கூறியுள்ளார்.

ஒரு நேர்காணலில் பேசும்போது “நான் இந்தியில் இயக்கிய நாயக் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது பெரிய வரவேற்பைப் பெறவில்லை. அதற்கு பல காரணங்கள் உள்ளன. அந்த படம் வெளியான போதுதான் டிவின் டவர் குண்டுவெடிப்பு நடந்தது. அது கூட படத்தின் வசூலைப் பாதித்தது.
ஆனால் தொலைக்காட்சியில் அந்த படம் பல தடவை திரையிடப்பட்டு எல்லோரும் ரசித்துப் பார்த்தார்கள். அந்த படத்தின் ஹீரோ அனில் கபூர் என்னிடம் “நாயக்” திரைப்படம்தான் டிவியின் ‘ஷோலே’ எனக் கூறினார்.” எனப் பேசியுள்ளார். ஷோலே இந்திய அளவில் எந்தவொரு படமும் பெறாத மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. நாயக் படம் ஷங்கர் இயக்கி சூப்பர் ஹிட்டான முதல்வன் படத்தின் ரீமேக் ஆகும்.
