உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள சிவகுட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கர் காட் பகுதியில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்த இரு மாணவிகள் தங்கியிருந்த விடுதிக்குள் நள்ளிரவில் புகுந்து கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த விடுதி உரிமையாளரின் மகனான சுபம் திவேதி என்ற இளைஞன், நள்ளிரவு 2 மணி அளவில் மாணவிகளின் அறைக்குள் அத்துமீறி நுழைந்து அவர்களைக் கொடூரமாகத் தாக்கியுள்ளான். மாணவிகளின் முடியைப் பிடித்து இழுத்து, தகாத வார்த்தைகளால் திட்டி அவன் அராஜகத்தில் ஈடுபடும் 30 வினாடி நீளமுள்ள காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரை உலுக்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவிகளின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்ட சுபம் திவேதி கடந்த 10 நாட்களாகவே அவர்களுக்குத் தொடர்ந்து போன் செய்தும், குறுஞ்செய்திகளை அனுப்பியும் தொந்தரவு கொடுத்து வந்துள்ளான். சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த அவன், மாணவிகள் கதவைத் திறக்க மறுத்ததால் அறையை வெளியிலிருந்து பூட்டியுள்ளான். இதனால் பயந்துபோன மாணவிகள் உதவிக்குக் கூச்சலிட்டதை அடுத்து, அங்கு வந்த அவனது தாயார் கதவைத் திறந்துள்ளார். ஆனால், அதன்பின்னரும் அடங்காத அந்த இளைஞன், மீண்டும் மாணவிகளைத் தாக்கியதுடன், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் முன்னிலையிலேயே உடைந்த கண்ணாடித்துண்டுகளால் அவர்களைத் தாக்கி, கொலை மிரட்டலும் விடுத்துள்ளான்.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து சுபம் திவேதியைக் கைது செய்தனர். இருப்பினும், இந்தச் தீவிரமான குற்றச்சாட்டின் பின்னரும் நீதிமன்றம் அவனுக்குப் பிணை (ஜாமீன்) வழங்கியுள்ளது மாணவிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமேதி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டு பிரயாக்ராஜில் தங்கிப் படித்து வரும் மாணவிகளுக்குப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள இந்தச் சம்பவம், தற்போது நாடு முழுவதும் பலத்த கண்டனங்களை எழுப்பி வருகிறது.
