ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தில், நட்பின் புனிதத்தையே கொச்சைப்படுத்தும் வகையில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. காட்புரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், சாகர் என்ற நபர் தனது உயிர் நண்பன் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி, அவரது மனைவியை துப்பாக்கி முனையில் மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தான் மைத்துனி என்று முறை வைத்து அழைக்கும் பெண்ணிடமே இத்தகைய அரக்கத்தனமான செயலில் சாகர் ஈடுபட்டது அந்தப் பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 6-ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, யாரிடமாவது சொன்னால் குடும்பத்தையே கொன்றுவிடுவதாக மிரட்டிச் சென்றதால் அந்தப் பெண் மிகுந்த அச்சத்தில் இருந்துள்ளார். மன உளைச்சலில் இருந்த அவரிடம் குடும்பத்தினர் விசாரித்தபோது, கண்ணீருடன் உண்மையை உடைத்தார். இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான அந்த ‘நண்பன்’ சாகரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
