கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர், பள்ளி முடிந்து வீடு திரும்பிய பின்னர் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, அவருக்கு அடையாளம் தெரிந்த ஒருவரால் சைக்கிளில் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே ஏற்கனவே நின்றிருந்த மற்றொரு நபருடன் சேர்ந்து, இருவரும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதுடன், பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வீடு திரும்பியபோதும், அதிர்ச்சியில் பெற்றோரிடம் எதுவும் சொல்லாமல் இருந்துள்ளார். மறுநாள் பள்ளிக்குச் சென்ற மாணவி சோர்வுடன் காணப்பட்டதால், அவரது வகுப்பாசிரியர் விசாரித்துள்ளார். அப்போது தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் குறித்து அச்சத்துடன் மாணவி தெரிவித்துள்ளார்.
உடனே அதிர்ச்சியடைந்த ஆசிரியர், மாணவியின் பெற்றோருக்குத் தகவல் கொடுத்தார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மாவட்ட எஸ்.பி.யின் உத்தரவின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.
சந்தேகத்தின் பேரில் அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்த போலீசார், அவனுடைய மற்றொரு நண்பரையும் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
