கர்நாடகா மாநிலம் பல்லாரி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், 17 வயது முதலாம் ஆண்டு மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த தாவரவியல் பேராசிரியர் ரவிகிரண் (42) என்பவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருமணமான ரவிகிரணுக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ள நிலையில், கல்லூரிக்கு வந்த மாணவியுடன் படிப்பு மற்றும் குடும்ப விவகாரங்களில் உதவி செய்வது போல நடித்து, அவரிடம் நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். ஒருகட்டத்தில் தனக்கு திருமணமான உண்மையை முழுமையாக மறைத்து, மாணவியிடம் காதல் வலையை வீசியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பேராசிரியர் ரவிகிரண் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இந்நிலையில், பேராசிரியருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கும் அதிர்ச்சித் தகவல் மாணவிக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து மாணவி கல்லூரியிலேயே பேராசிரியரிடம் நியாயம் கேட்டு தகராறில் ஈடுபட்டபோது, ரவிகிரண் தனது சுயரூபத்தைக் காட்டி, உல்லாசத்திற்காகவே அவரிடம் பழகியதாகக் கூறி ஆத்திரமடைந்துள்ளார்.
இதனால் கடும் மனமுடைந்த மாணவி, தனக்கு நேர்ந்த துயரத்தை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். மகளுக்கு நேர்ந்த கொடுமையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக பல்லாரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், கல்லூரி மாணவியை ஏமாற்றி சீரழித்த பேராசிரியர் ரவிகிரணை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
