நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியில், வாய் பேச முடியாத 25 வயது மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவர், அவரது சொந்த உறவினராலேயே பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கர்ப்பமாக்கப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினசரி கூலி வேலைக்குச் செல்லும் தாயின் பாதுகாப்பில் இருந்த அந்தப் பெண், கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து வாந்தி எடுத்ததால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோதே அவர் கர்ப்பமாக இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த தாய் அளித்த புகாரின் பேரில் மல்லசமுத்திரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், அதே பகுதியில் வசிக்கும் தாயின் தங்கை மகனான திருமணமான வாலிபர் ஒருவர், கடந்த இரண்டு மாதங்களாக அந்தப் பெண்ணை மிரட்டித் தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து வந்தது தெரியவந்தது. மூன்று வயதில் பெண் குழந்தை இருக்கும் நிலையிலும், மாற்றுத்திறனாளி என்று கூட பாராமல் இந்த அக்கிரமத்தில் ஈடுபட்ட அந்த வாலிபரை போலீசார் உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
