“ஒரே லிஸ்டில் 17 விஜய்கள்”… தவெக வேட்பாளர் பட்டியலில் ஒளிந்திருக்கும் அந்த ‘சென்டிமென்ட்’ ரகசியம்… அதிரும் தமிழக அரசியல் களம்…!

By Nanthini on பங்குனி 30, 2026

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளுக்குப் போட்டியாக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகமும் (தவெக) தனது 234 தொகுதிகளுக்கான முழுமையான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் வேட்பாளர்களை அறிமுகம் செய்த விஜய், தானும் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்து அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார். குறிப்பாக, திருச்சி கிழக்கு மற்றும் சென்னை பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் அவர் களம் காண்பது இப்போதே அத்தொகுதிகளை ‘நட்சத்திர’ அந்தஸ்துக்கு உயர்த்தியுள்ளது.

இந்த வேட்பாளர் பட்டியலில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், மொத்தம் உள்ள 234 வேட்பாளர்களில் 17 பேரின் பெயர்களில் ‘விஜய்’ என்ற பெயர் இடம் பெற்றுள்ளதுதான். கட்சியின் தலைவர் ‘ஜோசப் விஜய்’ தனது பெயரை அறிவித்ததைத் தொடர்ந்து, வேட்பாளர் பட்டியலில் அடுத்தடுத்து ‘விஜய்’ என்ற பெயர்கள் ஒலிக்கத் தொடங்கின. குமாரபாளையத்தில் விஜயலட்சுமி, கும்மிடிப்பூண்டியில் விஜய்குமார், மாதவரத்தில் விஜய் பிரபு எனப் பட்டியல் நீண்டது. இது தற்செயலாக நடந்ததா அல்லது ஒரு வியூகமா என்று தெரியவில்லை என்றாலும், சமூக வலைதளங்களில் தவெக தொண்டர்கள் இதனை உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

   

மேலும், இந்த பட்டியலில் ஏற்கனவே அரசியல் அனுபவம் மிக்க முக்கிய நிர்வாகிகளுக்கும், பொதுமக்களிடையே அறிமுகமான முகங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தியாகராயர் நகரில் புஸ்ஸி ஆனந்த், மயிலாப்பூரில் வெங்கட்ராமன், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா எனப் பல முக்கியப் புள்ளிகள் களமிறக்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஈரோடு கிழக்கு முதல் உசிலம்பட்டி வரை பல தொகுதிகளில் விஜய் மோகன், விஜய் பரணிபாலாஜி, விஜய் தமிழன் பார்த்திபன் என ‘விஜய்’ என்ற பெயரைக் கொண்ட இளைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது கட்சித் தலைவரின் பெயரிலேயே வேட்பாளர்கள் இருப்பது தொண்டர்களிடையே ஒருவிதமான நெருக்கத்தையும், அடையாளத்தையும் உருவாக்கியுள்ளது.

   

தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக அரசுக்கும் தவெக-வுக்கும் இடையே பிரசார அனுமதி தொடர்பாகப் பல்வேறு வாக்குவாதங்கள் எழுந்து வரும் நிலையில், விஜய்யின் இந்த அதிரடி வேட்பாளர் அறிவிப்பு மற்ற கட்சிகளுக்குச் சவாலாக அமைந்துள்ளது. 17 வேட்பாளர்களின் பெயரில் ‘விஜய்’ இடம்பெற்றிருப்பது தேர்தல் களத்தில் ஒரு புதிய ட்ரெண்டாக மாறியுள்ளது. பலமுனைப் போட்டி நிலவும் 2026 தேர்தலில், இந்த ‘விஜய்’ பட்டாளம் எந்த அளவுக்கு வாக்குகளை அறுவடை செய்யப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.