தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரங்களை அறிந்துகொள்வதில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, அரசியலில் முதன்முறையாகக் களம் காணும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அவரது பிரமாணப் பத்திரத்தை மட்டும் இதுவரை சுமார் 3.20 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இது தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
விஜய்யைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தை சுமார் 1.30 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். வேட்பாளர்களின் சொத்து மதிப்பு, கல்வித் தகுதி மற்றும் அவர்கள் மீதான குற்ற வழக்குகள் குறித்த விவரங்களை வெளிப்படையாகத் தெரிந்துகொள்ளும் வசதியைத் தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், மற்ற முன்னணி அரசியல் தலைவர்களைக் காட்டிலும் தவெக தலைவர் விஜய்யின் பின்னணி மற்றும் சொத்து விவரங்களை அறிந்துகொள்ளவே மக்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்களிடையே மிகப்பெரிய அளவில் போட்டி நிலவி வருவது இந்த எண்ணிக்கையின் மூலம் உறுதியாகியுள்ளது.
