மலேசியாவை சேர்ந்த ஸ்ரித்திகா மாடலிங் துறையில் கால் பதித்து பிறகு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்த நிலையில் மகேஷ் சரண்யா மற்றும் பலர் என்ற திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த நிலையில் அதனை ஏற்றுக் கொண்டு நடிக்க தொடங்கினார். சன் டிவியில் இவர் நடித்த கலசம் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடிக்கடி சில திரைப்படங்களிலும் இவர் நடித்து வந்தார். பிறகு முழு நேர சீரியல் நடிகையாக மாறிய இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது திருமுருகன் இயக்கத்தில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியல் தான். 2010 ஆம் ஆண்டு தொடங்கி 2015 ஆம் ஆண்டு வரை சுமார் ஐந்தாண்டுகள் ஒளிபரப்பான இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து மாமியார் தேவை, உறவுகள் சங்கமம், வைதேகி, உரிமை, குலதெய்வம், என் இனிய தோழி மற்றும் கல்யாண பரிசு உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட சீரியல்களில் இவர் நடித்துள்ளார். சீரியலில் முன்னணி நடிகையாக இருக்கும் சமயத்தில் சனீஸ் என்பவரை 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த இவருக்கு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் திருமணமான இரண்டே வருடத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தார்.

விவாகரத்திற்கு பிறகு மீண்டும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த ஸ்ரித்திகா எஸ் எஸ் ஆர் ஆரியன் ஹீரோவாக நடித்த மகராசி தொடரில் கதாநாயகியாக நடித்தார். இந்தத் தொடரில் இருவரும் ஒன்றாக நடித்துக் கொண்டிருக்கும் போது நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறிய நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவர்களுடைய திருமணம் எளிமையாக நடைபெற்ற நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடந்தது. இவர்களுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தற்போது திருமணம் ஆகிய ஒரு வருடம் கழித்து ஸ்ரித்திகா ஆரியன் தம்பதியினர் தாங்கள் பெற்றோர் ஆகியுள்ள தகவலை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளன. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், மிகுந்த சக்தியுடன் பெரும் பொறுப்பு வருகிறது. எங்கள் பயணம் எங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் மிகுந்த அன்பு மற்றும் ஆதரவுடன் தொடர்கிறது. எனவே இப்போது நாங்கள் பெற்றோராக வாழ்க்கையின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பகுதிக்குள் அடி எடுத்து வைக்கிறோம் என்று அவர்கள் பதிவிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் இந்த தம்பதிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
