தவெக சட்டமன்ற உறுப்பினரிடம் பேரம் பேசியதாகக் கூறப்படும் வழக்கில், தனது பெயர் எங்குமே குறிப்பிடப்படாத நிலையில் காவல்துறையினர் தன்னை ஏன் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றிருந்த போதிலும், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டிருந்தனர்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் போலீசுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும், முதல் தகவல் அறிக்கையிலோ அல்லது வழக்கின் மற்ற விவரங்களிலோ தனது பெயரே இல்லாதபோது தான் ஏன் ஆஜராக வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒருவேளை தான் நேரில் ஆஜராகும் பட்சத்தில், இந்த விசாரணையைப் பயன்படுத்தி காவல்துறை தன்னை வேறு ஏதேனும் புதிய வழக்குகளில் திட்டமிட்டுக் கைது செய்யக்கூடாது என்ற நிபந்தனையையும் அவர் தனது கடிதத்தில் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
