தவெக எம்.எல்.ஏ-க்களிடம் பேரம் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், தாம் எங்கும் ஓடி ஒளியவில்லை என்று தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திருவல்லிக்கேணி போலீஸாருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், இந்த குறிப்பிட்ட வழக்கில் தம்மீதோ அல்லது தமது சகோதரர் அசோக்குமார் மீதோ எந்தவொரு புகாரும் இல்லாத சூழலில், தாங்கள் எவ்வாறு விசாரணைக்கு ஆஜராக முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தாம் ஒரு மக்கள் பிரதிநிதி மட்டுமன்றி, தொழில் நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வரும் ஒரு தொழிலதிபர் என்பதையும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளையில், இந்த விவகாரத்தில் தாம் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமானால் தனக்குச் சில சட்டப்பூர்வப் பாதுகாப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் நிபந்தனை விதித்துள்ளார். தான் இந்த வழக்கில் நேரில் ஆஜராகும்பட்சத்தில், வேறு எந்தவொரு வழக்கிலும் தன்னைக் கைது செய்யக் கூடாது என்றும், புதிய பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் ’35 clause (3) BNS’ நோட்டீஸ் தனக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி வலியுறுத்தியுள்ளார். இந்த திடீர் கடிதம் மற்றும் அதில் உள்ள நிபந்தனைகள் தமிழக அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
