சட்டப்பேரவையில் கனிம வளம் மற்றும் டாஸ்மாக் துறைகளில் ஊழல் நடைபெற்றுள்ளதாகத் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துப் பதிலளித்துள்ளார். பேரவையில் பேசிய ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டில் கனிம வளத்துறைக்கு அடுத்தபடியாக டாஸ்மாக்கில் அதிக ஊழல் நடந்துள்ளதாகவும், இது குறித்த முழு விவரங்களும் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறினார். மேலும், வட மண்டலத்தில் வறுமை காரணமாகவே மது விற்பனை அதிகமாக இருப்பதாகவும், முந்தைய ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் உடல்வலிக்காகக் குடிக்கிறார்கள் எனக் கூறியதற்கு எதிர்ப்பைப் பதிவு செய்வதாகவும் குறிப்பிட்ட அவர், ஒரே நாளில் மதுவிலக்கைக் கொண்டுவருவது பெண்களைப் பாதிக்கும் என்பதால் போர்க்கால அடிப்படையில் மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அமைச்சரின் பேச்சுக்கு உடனடியாகப் பதிலளித்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுகவின் முதன்மைக் கொள்கையே பூரண மதுவிலக்குதான் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்று தெளிவுபடுத்தினார். அதனால்தான் திமுக ஆட்சியில் வெறுமனே காகித அளவில் இல்லாமல், நடைமுறையில் 603 மதுக்கடைகள் முழுமையாக மூடப்பட்டதாகச் சுட்டிக்காட்டினார். இது தொடர்பான அதிகாரப்பூர்வப் பட்டியல் தற்போதைய அமைச்சரின் கையிலேயே இருக்கும் துறையில்தான் உள்ளது என்றும், அவர் அதை நேரில் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்றும் பேரவையில் காரசாரமாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி, “திமுக அரசின் மீது வீண் பழியைப் போட்டு, மக்கள் மத்தியில் கெட்ட பெயரை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே இந்த அரசு அவசர அவசரமாக வழக்கைப் பதிவு செய்துள்ளது. பூதக்கண்ணாடி வைத்துத் தேடிப் பார்த்து தவறுகளைக் கண்டுபிடிக்க முயல்கிறார்கள். இப்போது உங்கள் அரசாங்கம்தான் நடந்து கொண்டிருக்கிறது; எனவே தாராளமாக, தீவிரமாக விசாரியுங்கள். ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள். கடந்த காலத்தில் தவறு நடந்ததா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது நீதிமன்றம்தானே தவிர நீங்கள் அல்ல” என்று காட்டமாகக் கூறினார்.
முடிவில், அரசு தொடுத்துள்ள இந்த வழக்கு முற்றிலும் உண்மைக்கு மாறானது என்றும், அரசியல் காரணங்களுக்காகக் கடந்த ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த மாயத்தோற்றத்தை உருவாக்க முயல்கிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார். “நாங்கள் இந்த பொய் வழக்கைப் பயமின்றிச் சட்டப்படி நீதிமன்றத்தில் எதிர்கொண்டு, நிரபராதி என்பதை நிச்சயமாக நிரூபித்துக் காட்டுவோம். நீங்களும் நீதிமன்றத்தில் வழக்கைச் சந்தியுங்கள்; தீர்ப்பு வந்த பிறகு உண்மை என்ன என்பது மக்களுக்குத் தெளிவாகப் புரியும்” என்று சவால் விடுத்துத் தனது உரையை முடித்தார்.
