செந்தில் பாலாஜிக்கு அடுத்த ஷாக்…. 400 கோடி ஊழல் புகாரில் சிபிஐ அதிரடி என்ட்ரி…. உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!

By Nanthini on சித்திரை 29, 2026

Spread the love

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள் மீது சுமத்தப்பட்ட மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு புகாரை மத்திய புலனாய்வுத் துறை (CBI) விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கடந்த 2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில், சுமார் 45,800 மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டதில் அரசுக்கு ₹397 கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறி, அதிமுக வழக்கறிஞர் அணியின் துணைச் செயலாளர் சரவணன் மற்றும் ‘அறப்போர் இயக்கம்’ சார்பில் தொடரப்பட்ட வழக்கில் இந்த அதிரடித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், டெண்டர் கோரப்பட்டபோது பல்வேறு நிறுவனங்கள் ஒரே விலையைக் குறிப்பிட்டிருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக வாதிட்டனர். மேலும், ஆரம்பகட்ட விசாரணையில் முறைகேட்டிற்கான முகாந்திரம் இருப்பதாகக் கூறிய லஞ்ச ஒழிப்புத்துறை, பின்னர் புகாரில் ஆதாரம் இல்லை எனக்கூறி வழக்கை முடித்து வைத்தது சட்டப்படி தவறு என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. செந்தில் பாலாஜி மற்றும் டான்ஜெட்கோ தலைவர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருப்பதாக மனுதாரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

   

மறுபுறம், இந்த குற்றச்சாட்டுகளை டான்ஜெட்கோ நிர்வாகம் முற்றிலுமாக மறுத்தது. மின்மாற்றிகள் ஒவ்வொன்றும் சந்தை விலையை விட ₹30,000 முதல் ₹40,000 வரை குறைவான விலையிலேயே கொள்முதல் செய்யப்பட்டதாகவும், இதன் மூலம் அரசுக்கு நிதிச் சேமிப்புதான் ஏற்பட்டதே தவிர, இழப்பு ஏற்படவில்லை என்றும் வாதிடப்பட்டது. மேலும், லஞ்ச ஒழிப்புத்துறையின் விரிவான விசாரணைக்குப் பிறகே புகார்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

   

இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கின் தீவிரத்தன்மை மற்றும் பொதுப்பண முறைகேடு புகாரைக் கருத்தில் கொண்டு இதனை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதே சரியாக இருக்கும் எனத் தீர்ப்பளித்தது. அத்துடன், இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் எனத் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.