“போலீசுக்கு செந்தில் பாலாஜி போட்ட அதிரடி கண்டிஷன்”… அலறும் திருவல்லிக்கேணி ஸ்டேஷன்… திமுக கூடாரத்தையே உலுக்கிய அந்த 35 கோடி ரகசியம்….!

By Nanthini on ஆடி 15, 2026

Spread the love

முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகியோர், தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது. இந்த உத்தரவின்படி, அவர்கள் இருவரும் தினமும் காலை மற்றும் மாலை என இருவேளையும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். இருப்பினும், கடந்த ஒரு வாரமாக அவர்கள் இருவரும் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை என்பது தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இவர்களின் இந்த நீதிமன்ற அவமதிப்புச் செயலை சுட்டிக்காட்டி, வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் புதிய மனுவைத் தாக்கல் செய்ய காவல்துறை தீவிரமாக முடிவெடுத்துள்ளது. ஜாமீன் ரத்து செய்யப்படும் பட்சத்தில், செந்தில் பாலாஜி மற்றும் அசோக் ஆகிய இருவரையும் உடனடியாகக் கைது செய்ய சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, உளவுத்துறையினர் அவர்கள் இருவரையும் கண் கொத்திப் பாம்பு போல தீவிரமாகக் கண்காணித்து, அதுகுறித்த தகவல்களை கமிஷனருக்கு உடனுக்குடன் வழங்கி வருகின்றனர்.

   

இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு இடையே, செந்தில் பாலாஜி திருவல்லிக்கேணி போலீசாருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “நான் நேரில் ஆஜரானால் என்னை வேறு வழக்கில் கைது செய்யத் திட்டமிட்டுள்ளீர்கள்; எனவே, என்னை வேறு வழக்குகளில் கைது செய்ய மாட்டோம் என்று காவல்துறை உறுதி அளித்தால் மட்டுமே நான் ஆஜராவேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதத்தைக் கண்டு அதிருப்தியடைந்த போலீசார், “நிபந்தனைகளை விதித்தது நீதிமன்றம், அதற்கு நாம் ஏன் உறுதி அளிக்க வேண்டும்? ஆஜராவதும் ஆகாததும் அவரது விருப்பம், ஆஜராகத் தவறினால் சட்டப்படியான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம்” என்று ஆலோசித்து வருகின்றனர்.

   

வேறு வழக்கில் கைது செய்யப்படுவோம் என்று செந்தில் பாலாஜி அச்சப்படுவதற்குப் பின்னால் ஒரு முக்கியக் காரணம் இருப்பதாக திமுக தரப்பிலிருந்தே தகவல்கள் கசிந்துள்ளன. இந்த குதிரை பேர வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுமார் 35 கோடி ரூபாய் வரை சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை நடந்திருப்பதை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த விவகாரம் குறித்து அமலாக்கத்துறைக்குக் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதால், அமலாக்கத்துறை இதில் வழக்குப் பதிவு செய்து தம்மைக் கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தினாலேயே செந்தில் பாலாஜி காவல் நிலையத்தில் ஆஜராவதைத் தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது.