“ஹார்ட் டிஸ்க் திருடு போனதுக்கு… உங்களுக்கு ஏன் பதறுது செந்தில் பாலாஜி?” – போட்டுடைத்த அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார்….!

By Nanthini on ஆனி 6, 2026

Spread the love

மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர் காவல் துணை ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கு, நிர்வாகச் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், மாவட்டத்தில் நிலவும் பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து அரசின் நிலைப்பாட்டை விளக்கினார். குறிப்பாக, மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் மது விற்பனையை முறைப்படுத்தவும் சீராக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், மாவட்டத்தில் இயங்கி வரும் மற்றும் மூடப்பட்டுள்ள குவாரிகளின் எண்ணிக்கையைத் துல்லியமாகக் கணக்கெடுக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும், இயற்கை வளங்களை யாராவது கொள்ளையடித்திருந்தால் அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.

   

தொடர்ந்து பேசிய அமைச்சர், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஹார்ட் டிஸ்க் காணாமல் போன விவகாரம் குறித்துப் பேசுகையில், “ஹார்ட் டிஸ்க் திருட்டு தொடர்பாகக் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. அந்த ஹார்ட் டிஸ்க்கில் இருந்து தற்போது வரை என்னென்ன விவரங்கள் திருடப்பட்டுள்ளன என்பது குறித்தும் காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். சூழ்நிலை இப்படி இருக்க, ஹார்ட் டிஸ்க் திருடு போனது என்றவுடன் உத்தமர் செந்தில் பாலாஜி ஏன் நீதிமன்றத்திலோ அல்லது விசாரணையிலோ ஆஜராக வேண்டும்?” என்று காரசாரமாகக் கேள்வி எழுப்பினார்.

   

அரசின் செயல்பாடுகள் மற்றும் அரசியல் சூழல் குறித்துப் பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர்கள் தங்களின் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காகவே அடிக்கடி செய்தியாளர்களைச் சந்தித்ததாகக் விமர்சித்தார். செய்தியாளர்களைச் சந்தித்தால் தான் ஆட்சியை நடத்த முடியும் என்பதில்லை என்றும், தமிழக முதல்வர் தொடர்ந்து மக்களை நேரடியாகச் சந்தித்து நலத்திட்டங்களை வழங்கி வருகிறார் என்றும் கூறினார். மேலும், திமுகவைப் பார்த்து தங்கள் முதல்வர் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், அண்ணாமலை புதிய இயக்கம் தொடங்குவது குறித்த கேள்விக்கு, “யார் வேண்டுமானாலும் இயக்கம் தொடங்கலாம்” என்று சுருக்கமாகப் பதிலளித்தார்.