செந்தில் பாலாஜி வழக்கில் திடீர் திருப்பம்… ஆளுநர் இன்னும் கையெழுத்து போடாத ரகசியம்… கோப்புகளை உடைத்த அமைச்சர் நிர்மல் குமார்…!

By Nanthini on ஆனி 18, 2026

Spread the love

அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது, துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில், இதில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தது. முன்னாள் அமைச்சர் என்பதால் இவர் மீது மேல் நடவடிக்கை மற்றும் விசாரணை நடத்த மாநில அரசின் அனுமதி அவசியமாகும். இதற்காக கடந்த மே 15-ஆம் தேதி அமலாக்கத்துறை தரப்பில் தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வேலைக்கு பணம் பெற்ற வழக்கில் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்குத் தொடர, தமிழக அரசு ஆளுநர் ஆர்.வி. அர்லேகரின் அனுமதியைக் கோரியிருந்தது. ஆனால், ஆளுநர் தரப்பில் இருந்து இதுவரை அதற்கான ஒப்புதல் வழங்கப்படவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் இந்த அதிரடித் தகவலைத் தெரிவித்துள்ளார்.

   

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், திமுக மற்றும் பாஜக இடையேதான் இணக்கமான உறவு இருந்து வருகிறது என்று குற்றம் சாட்டினார். அமலாக்கத்துறை சார்பாக செந்தில் பாலாஜி உள்ளிட்ட ஒருசிலர் மீது நடவடிக்கை எடுக்கக் கடிதம் எழுதப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட கோப்புகள் ஒரு வாரத்திற்கும் மேலாகத் தேங்கிக் கிடக்கின்றன என்றும், இதுவரை ஆளுநர் ஏன் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

   

மேலும், ஆளுநரும், திமுகவும், பாஜகவும் ஒன்றாகவே இருக்கிறார்கள் என்றும், பாஜகவின் மறைமுக முகமாகவே திமுக செயல்பட்டு வருகிறது என்றும் அவர் சாடினார். செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் ஏன் இன்னும் கையெழுத்துப் போடாமல் தாமதிக்கிறார், யாருக்காக அவர் காத்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கு திமுகவும் விளக்கமளிக்க வேண்டும் என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தனது பேட்டியில் வலியுறுத்தியுள்ளார்.