பங்குச்சந்தைக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்த போர்ச் சூழல் நீங்கி, அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியதால் சந்தை மீளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்த பெரும் பிரச்சனையாக ‘செயற்கை நுண்ணறிவு’ சார்ந்த தொழில்நுட்பக் குமிழி வெடித்துள்ளது. இதன் விளைவாக, உலகளாவிய பொருளாதாரச் சூழல் மற்றும் டெக் பங்குகளின் கடுமையான வீழ்ச்சி காரணமாக, இந்தியப் பங்குச்சந்தை இன்று செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது. குறிப்பாக, தென் கொரியப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட பெரும் வீழ்ச்சியும், உலக அளவில் ஐடி மற்றும் டெக் துறையில் பதிவான கடுமையான விற்பனை முதலீட்டாளர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்றைய வர்த்தக நேரத்தின் முடிவில், மும்பை பங்குச்சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 893 புள்ளிகள் சரிந்து 76,200 என்ற புள்ளிகளில் நிலைபெற்றது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 50 குறியீடு 279 புள்ளிகளை இழந்து, முக்கிய ஆதரவு நிலையான 23,850 புள்ளிகளுக்கும் கீழே சரிந்து வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்த கரடியின் பிடியில் இருந்து மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் நிறுவனங்களின் பங்குகளும் தப்பவில்லை. நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடு 0.6 சதவீதமும், நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 0.75 சதவீதமும் வீழ்ச்சியடைந்தன. இந்த திடீர் வீழ்ச்சியால், ஒரே நாளில் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பில் கிட்டத்தட்ட 5.77 லட்சம் கோடி ரூபாய் துடைத்தெறியப்பட்டுள்ளது.
ஆசிய சந்தைகளில் நிலவிய மோசமான சூழலே இந்த வீழ்ச்சிக்கு முதன்மையான காரணமாக அமைந்தது. குறிப்பாக, தென் கொரியாவின் முதன்மை பங்குச்சந்தையான ‘கோஸ்பி’ ஒரே நாளில் 9 சதவீதத்திற்கும் மேலாகச் சரிந்து வரலாறு காணாத வீழ்ச்சியைப் பதிவு செய்தது. இதனால் சந்தையில் நிலவிய பீதியைக் கட்டுப்படுத்த அங்கு 20 நிமிடங்களுக்கு வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் ‘சர்க்யூட் பிரேக்கர்’ நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இதன் எதிரொலியாக இந்தியச் சந்தையிலும் மதிய வர்த்தகத்தில் இன்ஃபோசிஸ், டிசிஎஸ், டாடா ஸ்டீல், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் அதானி போர்ட்ஸ் போன்ற ஜாம்பவான் நிறுவனங்களின் பங்குகள் 3.5 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. பார்மா மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய இரண்டு துறைகளைத் தவிர, மற்ற அனைத்து துறை சார்ந்த குறியீடுகளும் நஷ்டத்திலேயே முடிந்தன.
மறுபுறம், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ஒரே நாளில் சுமார் 635.91 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று முதலீடுகளைத் திரும்பப் பெற்றது சந்தையின் போக்கைப் பலவீனப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு 13 மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்ததால், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவைச் சந்தித்தது. வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் 6 பைசா சரிந்து 94.69 ஆக வர்த்தகத்தை நிறைவு செய்தது. உலகளாவிய டெக் துறையின் இந்த அதிரடி மாற்றம் மற்றும் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக இந்தியப் பங்குச்சந்தை தற்காலிகமாக ஒரு மந்தநிலையைச் சந்தித்துள்ளது.
