நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “தகுதி இல்லாதவர்கள் எல்லாம் நாட்டை ஆள நினைக்கிறார்கள்” என்ற வாசகத்துடன், தமிழக மக்களை அறிவார்ந்த சமூகமாக மாற்ற அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என ரசிகர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். கார் பந்தயம் மற்றும் சினிமாவில் உச்சம் தொட்ட அஜித்தின் அடுத்த இலக்கு அரசியலாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் ஒட்டப்பட்டுள்ள இந்தச் சுவரொட்டிகள், தற்போது வைரலாகி வருகின்றன.
இந்த போஸ்டர்களில் உள்ள வாசகங்கள், தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் விஜய்யை நேரடியாகச் சீண்டும் வகையில் அமைந்துள்ளதாகப் பொதுமக்கள் கருதுகின்றனர். ஏற்கனவே சினிமாவில் அஜித்-விஜய் ரசிகர்கள் இடையே கடும் போட்டி நிலவி வரும் சூழலில், தற்போது அது அரசியல் போஸ்டர் யுத்தமாக மாறியுள்ளது. தனக்கு ரசிகர் மன்றங்களே தேவையில்லை என்று அஜித் அறிவித்திருந்தாலும், அவரது பெயரில் ரசிகர்கள் மற்ற அரசியல் தரப்பினரை வம்பிழுக்கும் வகையில் போஸ்டர் ஒட்டியுள்ளது விவாதத்தை உருவாக்கியுள்ளது.
