“இனி அவரால ஒரு பயனும் இல்ல…” அவரை மாத்துங்க ஜி… அமித்ஷாவிடம் தூது போன ‘அந்த’ 3 முக்கிய புள்ளிகள்… டெல்லியை உலுக்கிய மாஜிக்களின் பகீர் கடிதம்…!

By Visaka on ஆடி 19, 2026

Spread the love

பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் அதிமுக தொடர் தேர்தல் சரிவுகளைச் சந்தித்து வருவதால், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கடும் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர். கட்சியில் சீனியர்களை அரவணைத்துச் செல்லாமல் இபிஎஸ் தன்னிச்சையாகச் செயல்படுவதாகவும், இதனால் சொந்தக் கட்சியினரே எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த அரசியல் முட்டுக்கட்டையை உடைக்க வேறு வழியில்லாத மாஜிக்கள் சிலர், இப்போது டெல்லி பாஜக மேலிடத்தின் கதவுகளைத் தட்டத் தொடங்கியுள்ளனர். “இபிஎஸ்-ஐ வைத்துக் கொண்டு எங்களால் கட்சியை நடத்த முடியாது, அவராலும் உங்களுக்கு எந்தப் பயனும் இல்லை” என்று கூறி, அதிமுகவின் தலைமை மாற்றத்திற்கு கைகொடுக்குமாறு டெல்லிக்கு ரகசியமாகத் தூது அனுப்பி நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

மறுபுறம், தமிழகத்தில் எப்படியாவது தாமரையை மலர வைக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு நகரும் பாஜக மேலிடமோ, இந்த விவகாரத்தில் கடுமையான குழப்பத்தில் சிக்கியுள்ளது. அதிமுகவின் உட்கட்சிப் பூசலில் நேரடியாகத் தலையிட்டால் அது தங்களுக்குச் சாதகமாக முடியுமா அல்லது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துமா என்ற தயக்கம் டெல்லி தலைவர்களிடம் நீடிக்கிறது. “முன்வைத்தால் கால் வேகும், பின்வைத்தால் தலை வேகும்” என்ற இக்கட்டான சூழ்நிலையில், எடப்பாடிக்கு எதிராக மாஜிக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்பதா வேண்டாமா என்று எந்தவொரு தீர்க்கமான முடிவும் எடுக்க முடியாமல் பாஜக தலைமை திணறி வருகிறது. தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள இந்த அதிகாரப் போட்டி, அதிமுகவின் எதிர்காலத்தை எந்தப் பாதைக்குக் கொண்டு செல்லப் போகிறது என்பதுதான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வியாகும்.