தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக பல்வேறு சிக்கல்களை தொடர்ந்து சந்தித்து வருகிறது. பாஜகவுடன் இ பி எஸ் கூட்டணி வைத்திருப்பதால் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். அதன் வெளிப்பாடாக சமீபத்தில் செங்கோட்டையன் பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க இபிஎஸ்-க்கு கெடு விதித்திருந்தார். ஆனால் அதற்கு அடுத்த நாளே செங்கோட்டையனை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார்.
இதனால் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பை வலியுறுத்தி வரும் செங்கோட்டையனின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி இபிஎஸ் அதிரடி காட்டினார். இதனால் முக்கிய முடிவு எடுக்க வேண்டிய நெருக்கடி அவருக்கு ஏற்பட்டுள்ளதால் அடுத்த கட்ட நகர்வு குறித்து தற்போது ஆலோசனை செய்து வருகிறார். இன்னும் சற்று நேரத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்பதால் குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர்.
