2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தந்த அதிர்ச்சியிலிருந்தே இன்னும் மீளாத அதிமுகவிற்கு, அடுத்தடுத்து விழும் அடிகள் அதன் அஸ்திவாரத்தையே அசைத்துப் பார்க்கத் தொடங்கியுள்ளன. எடப்பாடி பழனிசாமிக்கும் எஸ்பி வேலுமணிக்கும் இடையே உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், கட்சியில் மேலும் ஒரு பிளவு ஏற்பட்டுள்ளது. எஸ்பி வேலுமணிக்கு ஆதரவாக இருந்த அதிமுக எம்எல்ஏக்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), மற்றும் சத்யபாமா (தாராபுரம்) ஆகிய மூவரும் இன்று தங்களின் பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர். இவர்களின் ராஜினாமா கடிதங்கள் சபாநாயகரின் கைகளுக்குச் சென்றுள்ளது அதிமுக தலைமைக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அதிரடி அரசியல் திருப்பத்தின் பின்னணியில், தற்போதைய வருவாய்த் துறை அமைச்சரான மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் இருப்பதாகக் கூறப்படுகிறது. நேற்று மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், அவசர அவசரமாக டிஸ்சார்ஜ் ஆகி, ஓய்வெடுக்கக் கூட முற்படாமல் சென்னைக்கு வந்து இறங்கினார். அவர் சென்னைக்கு வந்த சில மணிநேரங்களிலேயே இந்த 3 எம்எல்ஏக்களும் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்ததோடு, கடிதத்தை அளிக்கும் போது செங்கோட்டையனும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுகவில் நீண்டகாலம் இருந்த செங்கோட்டையன், தன் பழைய தொடர்புகளைப் பயன்படுத்தி இந்த அரசியல் காய்களை நகர்த்தியிருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் பேசுகின்றன.
அதிமுகவிலிருந்து விலகிய இந்த மூன்று எம்எல்ஏக்களும் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையவுள்ளனர். சமீபத்தில் கோவை சிறுமி பாலியல் விவகாரத்தில் தவெக அரசை எஸ்பி வேலுமணி கடுமையாகச் சாடி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அடுத்த சில மணி நேரங்களிலேயே அவரது ஆதரவாளர்கள் தவெகவில் ஐக்கியமாவது வேலுமணி தரப்பிற்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் இந்த மூவருக்கும் அதே தொகுதிகளில் தவெக சார்பாக மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படலாம் என்றும், அவர்கள் தவெகவின் அதிகாரப்பூர்வ ‘விசில்’ சின்னத்தில் களம் காண்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விக்கெட் வீழ்ச்சி அதிமுகவிற்கு, குறிப்பாக எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய அடியாக மாறியுள்ளது. இதன் மூலம் சட்டமன்றத்தில் அதிமுகவின் பலம் 47-லிருந்து 45 ஆகக் குறைந்துள்ளது. மறுபுறம், தற்போது கூட்டணிக் கட்சிகளின் தயவோடு 108 இடங்களைப் பெற்று தமிழ்நாட்டை ஆண்டுவரும் முதலமைச்சர் விஜய்யின் தவெகவிற்கு இது ஒரு இமாலயப் பலமாகும். இந்த இடைத்தேர்தல்களில் தவெக வெற்றி பெற்றால், அது விஜய்யின் அரசை 118 என்ற மேஜிக் நம்பரை நோக்கி மேலும் நெருங்க வைக்கும் என்பதால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
