அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் நால் ரோட்டில், தமிழக வெற்றிக் கழகத்தின் பவானி தொகுதி வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நேற்று தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பவானிசாகரில் ரூ. 2,000 கோடி மதிப்பிலான அட்டை தொழிற்சாலை மற்றும் அந்தியூர்-அம்மாபேட்டை சாலையில் ரூ. 3,000 கோடி மதிப்பிலான எத்தனால் தொழிற்சாலை என இப்பகுதியில் மட்டும் ரூ. 5,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். மேலும், எடப்பாடி பழனிசாமி தரப்பு சுமார் 50 லட்சம் கோடி ரூபாய் வரை சம்பாதித்தும் இன்னும் ஆசை தீராமல் இருப்பதாகக் கடுமையாகச் சாடினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, தான் தான் முதலமைச்சராக இருந்திருக்க வேண்டும் என்றும், அன்றைய இரவு வரை அந்த முடிவிலேயே இருந்ததாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார். “எடப்பாடி பழனிசாமியிடம் பணப்பெட்டி இருந்ததால் கடைசி நேரத்தில் சூழல் மாறியது. சசிகலாவிடம் பேசும்போது கட்சி உடையக்கூடாது என்பதற்காகவே நான் விட்டுக்கொடுத்தேன்” என்று கூறிய அவர், கூவத்தூர் ரிசார்ட்டில் எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்து முதல்வர் பதவியைப் பெற்றதை ‘மலைப்பாம்பு நீந்தி வருவது போல இருந்தது’ என உருவகப்படுத்தி எள்ளி நகையாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், தன்னை முதல்வராக்கியவர்களையே எடப்பாடி பழனிசாமி தற்போது மதிக்கவில்லை என குற்றம் சாட்டினார். டிடிவி தினகரன், ஓபிஎஸ், தமக்கு உதவிய பிஜேபி மற்றும் பிரேமலதா விஜயகாந்த் என அனைவரையும் அவர் ஏமாற்றிவிட்டதாகக் கூறினார். குறிப்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நீக்கினால் தான் கூட்டணிக்கு வருவேன் என்று எடப்பாடி நிபந்தனை விதிப்பதாகக் குறிப்பிட்ட செங்கோட்டையன், தமிழ்நாட்டில் வேறு எவருமே இருக்கக்கூடாது என்ற நோக்கில் கொள்ளையடித்த பணமே போதாது என்று அவர் இன்னும் அலைகிறார் எனத் தனது பேச்சில் விமர்சித்தார்.
