தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை, திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் ஒருமையில் விமர்சித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் சாத்தான்குளத்தில் நடைபெற்ற கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இந்த அதிரடி விமர்சனங்களை முன்வைத்தார்.
திமுகவை யாராலும் வீழ்த்த முடியாது என்று முழங்கிய அனிதா ராதாகிருஷ்ணன், “நம் தலைவர் மு.க.ஸ்டாலினை வீழ்த்திவிட்டு, கொளத்தூரில் கொத்து பரோட்டா ஆக்கிவிட்டதாக சிலர் பேசுகிறார்கள். மாலை 6 மணிக்கு வீட்டுக்குள் போய்விட்டு, அடுத்த நாள் காலை 10 மணிக்கு எழுபவனுக்கு வெளியில் என்ன நடக்கிறது என்றே தெரியாது. தமிழ்நாட்டில் யார் இருக்கிறார்கள், யாருக்கு என்ன செய்தோம் என்பது கூட தெரியாமல், கரூரில் ஒரு கூட்டத்தில் பேப்பரை பார்த்து படித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று முதலமைச்சர் விஜயை மறைமுகமாக சாடினார்.
மேலும், விஜய் தமிழக அரசியலில் வெறும் சினிமா மோகத்தை மட்டுமே நம்பியிருப்பதாகக் குற்றம் சாட்டினார். “விஜய் சினிமாவில் நடிப்பது போலத்தான் தற்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த வேடங்கள் எல்லாம் மக்களிடம் எடுபடாது. மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், சினிமா கவர்ச்சியைக் காட்டி ஏமாற்றிவிடலாம் என்று முதலமைச்சர் விஜய் நினைக்கிறார். இவருக்குப் பின்னால் இருந்து ஆட்டுவிப்பது முதல் போட்ட முதலமைச்சரான ஆதவ் அர்ஜுனா தான். அவர்தான் விஜய் எப்படி நடக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்” என அனிதா ராதாகிருஷ்ணன் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார்.
சமீபத்தில் மேடைப் பேச்சுக்காகத் தான் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்தும், தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் குறித்தும் அவர் காட்டமாகப் பேசினார். “நான் மேடையில் பேசியதற்காக என்னை கைது செய்தார்கள். உடனே முன் ஜாமீனும் கிடைத்தது. ஆதவ் அர்ஜுனா இங்குள்ள போலீஸை கூப்பிட்டு, என்னை ஒரு மாதம் உள்ளே வைக்குமாறு கூறியுள்ளார். என்னை ஜெயிலில் அடைத்துவிடுவாயா? ஐந்து வருடம் இல்லை, எவ்வளவு காலம் உள்ளே வைத்திருந்தாலும் எந்த கொம்பனாலும் திமுகவை அசைக்க முடியாது” என்று மிக ஆக்ரோஷமாகப் பேசினார்.
இறுதியாக, தற்போதைய தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசிய அவர், “என்னை ஜெயிலுக்கு அனுப்புவியோ? அப்படி அனுப்பினால் உங்க ஆட்சி எத்தனை நாட்கள் இருக்கும் என்று தெரியுமா? உங்கள் ஆட்சியின் ஒவ்வொரு நாளும் இப்போது எண்ணப்பட்டு வருகிறது. வரவிருக்கின்ற உள்ளாட்சி மன்றத் தேர்தல் ஒரு புதிய வரலாற்றை உருவாக்கும் காலமாகும். இடைத்தேர்தலோ அல்லது உள்ளாட்சித் தேர்தலோ, எப்போது வந்தாலும் திமுக கூட்டணிதான் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும். தவெக-வோ அல்லது காங்கிரஸோ எங்குமே ஜெயிக்க முடியாது என்பதை நிரூபிப்போம்” என்று சவால் விடுத்து தனது உரையை முடித்தார்.
