தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த முடிவை ராகுல் காந்தியிடம் ஏற்கனவே தெரிவித்துவிட்டதாகவும், தேர்தல் முடிவுகள் வெளியான பின் முழுமையாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களின் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநிலத் தலைவராகப் பணியாற்றியதில் மனநிறைவு இருப்பதாகவும், எவ்வித அழுத்தமும் இன்றி சுயமாகவே இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இம்முறை காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர் தேர்விலும் ஒதுக்கீட்டிலும் கடும் இழுபறி நீடித்தது. இறுதியாக 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், செல்வபெருந்தகை மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடுகிறார். மாநிலத் தலைவராகப் பணியாற்றிய காலத்தில் பல திட்டங்களைத் தீட்ட முடிந்தாலும், கட்சிக்குள் உறவுகளைப் பேணுவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருந்ததாக அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். “தமிழகத்தின் பிள்ளையாக இருந்த நான், இனி ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் பிள்ளையாக மாறுவேன்” என அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், செல்வபெருந்தகையின் இந்த திடீர் விலகல் முடிவுக்குப் பின்னால் கட்சிக்குள் நிலவும் உட்கட்சி பூசல்களே முக்கியக் காரணம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்து காங்கிரஸில் இணைந்த செல்வபெருந்தகைக்கும், கட்சியின் பாரம்பரியத் தலைவர்களுக்கும் இடையே நீண்டகாலமாகவே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன. குறிப்பாக, தற்போதைய வேட்பாளர் தேர்வில் கட்சிக்கு உழைத்தவர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும், முறைகேடுகள் நடந்ததாகவும் எழுந்த புகார்கள் அவர் மீது நேரடித் தாக்குதலாக அமைந்தன. இத்தகைய விமர்சனங்கள் மற்றும் மூத்த தலைவர்களின் அதிருப்தி ஆகிய காரணங்களே அவரை இந்த அதிரடி முடிவை எடுக்கத் தூண்டியதாகக் கூறப்படுகிறது.
