“டெல்லிக்கு பறந்த ரகசிய ரிப்போர்ட்”… செல்வப்பெருந்தகைக்கு கல்தா? – அடுத்த தலைவர் இவர்தான்…. ராகுல் காந்தி எடுத்த அந்த ஒரு முடிவு…!

By Nanthini on சித்திரை 22, 2026

Spread the love

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீது எழுந்துள்ள தொடர் சர்ச்சைகள், கட்சியின் மேலிடத்தை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி தனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடப்பதாக அவர் வெளியிட்ட தகவல், பின்னர் அதிகாரப்பூர்வமாக மறுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராகுல் காந்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்பதைத் தவிர்க்கவே அவர் இத்தகைய ‘நாடகத்தை’ ஆடியதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாகச் சாடியுள்ளார். இந்த விவகாரம் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு தர்மசங்கடத்தை உருவாக்கியுள்ள நிலையில், வருமான வரித்துறை அவர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளது நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

இதற்கிடையே, ராகுல் காந்தியின் ஆங்கில உரையைத் தமிழில் மொழிபெயர்த்தபோது, செல்வப்பெருந்தகை தவறான தகவல்களைக் கூறியதாக எழுந்த புகாரும் மேலிடத்தின் கவனத்திற்குச் சென்றுள்ளது. தனது பேச்சைத் தவறாக மொழிபெயர்த்தது மற்றும் பொய் புகார்கள் மூலம் கட்சிக்குக் கெட்டப் பெயரை ஏற்படுத்தியது போன்ற காரணங்களால் ராகுல் காந்தி கடும் அப்செட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழக அரசியல் களத்தில் செல்வப்பெருந்தகையின் இத்தகைய செயல்பாடுகள் சமூக வலைதளங்களில் டிரோல் செய்யப்பட்டு வருவது, தேசிய அளவில் காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

   

இந்த விவகாரங்கள் தொடர்பாக உண்மை நிலையை அறிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அண்மையில் சென்னை வந்து தீவிர விசாரணை நடத்தினார். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்களான திருநாவுக்கரசர் மற்றும் கே.எஸ். அழகிரி ஆகியோரிடம் இதுகுறித்து அவர் தனித்தனியாகக் கருத்துக்களைக் கேட்டறிந்தார். இந்த ஆலோசனையின்போது, வருமான வரித்துறை சோதனை விவகாரத்தில் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கப்பட்டதாக மூத்த தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிகிறது. இந்த விசாரணை அறிக்கையை ராகுல் காந்தியிடம் வேணுகோபால் சமர்ப்பித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

   

தற்போதைய அரசியல் சூழல் மற்றும் கட்சிக்குள் எழுந்துள்ள எதிர்ப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, செல்வப்பெருந்தகை விரைவில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட வாய்ப்புள்ளதாக சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சட்டசபைத் தேர்தலுக்குப் பின் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் கூறியிருந்தாலும், தற்போதைய சர்ச்சைகளால் அந்த மாற்றம் முன்கூட்டியே நிகழக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சில நாட்களில் காங்கிரஸ் மேலிடம் இது குறித்த அதிரடி முடிவை வெளியிடும் எனத் தெரிகிறது.