“ஆட்சி மாறினா எல்லாமே மாறிடுமா?”…. பெஞ்சில் உட்கார வைத்த போலீஸார்…. கொந்தளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ…. ரூ.30 கோடி பேரம் பின்னணியில் நடக்கும் செம ட்விஸ்ட்….!

By Nanthini on கார்த்திகை 6, 2026

Spread the love

மதுரை முன்னாள் துணை மேயரும், அதிமுக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளருமான பி.எம். மன்னன், தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.30 கோடி பேரம் பேசியதாக எழுந்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபாவின் உதவியாளரிடம் இந்த பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து எதிர்க்கட்சியினர் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட மன்னனைப் பார்ப்பதற்காக பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்குச் சென்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிற்கு அங்கு நீண்ட நேரம் காத்திருப்பு நேரிட்டது. அதிகாரிகளிடம் அனுமதி கோரி, நீண்ட நேரம் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அவர், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். “ஆட்சி மாறினால் எல்லாமே மாறிவிடுமா? நான் 10 வருஷம் அமைச்சராக இருந்திருக்கேன், எங்களுக்கு ஒரு மரியாதை இல்லையா?” என்று அவர் ஆக்வேரமாகக் கேள்வி எழுப்பிய நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

   

மன்னன் மீதான இந்த அதிரடி கைது நடவடிக்கைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மன்னனைப் பொய் வழக்கில் தவெக அரசின் ஏவல்துறை கைது செய்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குதிரை பேரத்தில் ஈடுபட்டு தில்லுமுல்லு வேலைகளைச் செய்ததாகக் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் நோக்கில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

   

இதேபோல், அதிமுக மாநிலங்களவை எம்பி இன்பதுரையும் இக்கைது நடவடிக்கையைச் சட்ட ரீதியாகச் கேள்வி எழுப்பியுள்ளார். பி.எம். மன்னனுக்கு விசாரணைக்கு ஆஜராக ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்த நிலையில், ஆஜராகும் நாளுக்கு ஒரு நாள் முன்பாகவே கைது செய்தது ஏன் என்று அவர் வினவியுள்ளார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கும், புதிய சட்ட விதிகளுக்கும் முரணாக இந்தச் செயல் அமைந்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா அல்லது எதேச்சதிகாரமா என்றும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இதற்கிடையே, மன்னன் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுத்துள்ள செல்லூர் ராஜூ, தவெக எம்எல்ஏ முஸ்தபாவும் யோக்கியமானவர் அல்ல என்று சாடியுள்ளார். கவுன்சிலர் சீட்டுக்குக் கூட ஏலம் விடப்பட்டதாக அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். நீதிமன்ற விதிகளை மீறி அவசரக் கோலத்தில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த அரசியல் கைது நடவடிக்கையானது, தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையேயான மோதலை மேலும் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.