தமிழ் சினிமாவில் மறக்க முடியாத கவிஞர்கள் இருக்கின்றனர். இன்று எப்படி நாம் வைரமுத்து, வாலி, தாமரை, யுகபாரதி என புகழ்கிறோமோ, அதேப் போல 50, 60 களில் கொடிகட்டி பறந்த கவிஞர்களில் ஒருவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். தமிழ் திரையுலகில் கருத்து சூரியனாய் வலம் வந்தவர். பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும் பாடல் மூலம் நேரடி வர்ணனையாக தந்தவர். இனிய சொற்கள், ஆழமான பொருள், கற்பனை வளம், பொதுவுடமை சித்தாந்த கருத்துகள், வாழ்வியல் தத்துவம் என இவர் எழுதிய பாடல் ஒவ்வொன்றும் காற்றில் எழுதிய கல்வெட்டுகள் ஆகும்.
“ஆளும் வளரணும், அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி; ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி; மனிதனாக வாழ்ந்திட வேண்டும், மனதில் வையடா தம்பி! மனதில் வையடா தம்பி! மனதில் வையடா! வளர்ந்து வரும் உலகத்திற்கே, நீ வலது கையடா!” என இன்றைய இளைய தலைமுறையினருக்கும் தனது வரிகளால் அறிவுரை கூறியவர் பட்டுக்கோட்டை. ”தூங்காதே தம்பி தூங்காதே, சோம்பேறி என்ற பெயர் வாங்காதே”, ”திருடாதே பாப்பா திருடாதே” போன்ற பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் வெற்றி பெற்ற பாடல்கள்.
இப்படி அனைத்து விதமான கருத்துகளையும் தனது வரிகளுக்குள் அடக்கிய பட்டுக்கோட்டையினி திறமையை பார்த்து வியக்காத கலைஞர்களே இல்லை எனலாம். அப்படி ஒரு முறை, எம்.ஜி.ஆர் நடிப்பில் 1957-ம் ஆண்டு வெளியான சக்ரவர்த்தி திருமகள் என்ற படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை பிரபல பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் பாட சென்றுள்ளார். பாடலை பாடுவதற்கு முன்பு வரிகளை படித்துப் பார்த்த சீர்காழி, ”மனிதன் பொறக்கும் போது பொறந்த குணம், போக போக மாறுது “ என வரிகளை படிக்க படிக்க மெய்மறந்து போனாராம். பின்பு பட்டுக்கோட்டையை சந்தித்த அவர், தான் அணிந்திருந்த தங்க மோதிரத்தை அவருக்கு பரிசாக வழங்கினாராம்.