தமிழ்நாட்டில் நிலவும் மின் பற்றாக்குறையைச் சமாளிக்கத் தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யத் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசின் சொந்த மின் உற்பத்தித் திட்டங்களை வலுப்படுத்தாமல், இவ்வளவு அதிக விலை கொடுத்துத் தனியாரிடம் மின்சாரம் வாங்குவது கடுமையான கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
முந்தைய அரசுகள் தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதால் தான் மின்வாரியம் பல இலட்சம் கோடி ரூபாய் கடனில் மூழ்கியது என்றும், அதே தவறை தற்போதைய அரசும் தொடர்வது ஏற்புடையதல்ல என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், எதிர்க்கட்சியாக இருந்தபோது இதே போன்ற தனியாரின் உயர் விலைக் கொள்முதலைக் கண்டித்தவர்கள், இன்று ஆட்சிக்கு வந்ததும் அதைவிட அதிகமான விலைக்கு வாங்குவது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். திமுக ஆட்சியில் ஒரு யூனிட்டை ₹20-க்கு வாங்கிய போது அதை கமிஷன் என்று கூறிய CM விஜய், இன்று தனது ஆட்சியில் ₹35-க்கு வாங்குவதை பற்றி மக்களிடம் விளக்குவாரா என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு நிரந்தர தீர்வாக TN-ல் மின் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்
சூரிய ஒளி, காற்றாலை மற்றும் கடல் அலை போன்ற மாற்று மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத பசுமை மின்பெருக்கத் திட்டங்களில் அரசு போதிய கவனம் செலுத்தாததே இந்த நெருக்கடிக்குக் காரணம் என்று சீமான் குற்றம்சாட்டியுள்ளார். அவசரத் தேவையைக் காரணம் காட்டி மேற்கொள்ளப்படும் இந்த அதிகவிலைக் கொள்முதல் முடிவால், எதிர்காலத்தில் மின்கட்டணம் மேலும் பல மடங்கு உயர்த்தப்பட்டு எளிய மக்கள், விவசாயிகள் மற்றும் சிறு தொழில்துறையினர் மீதான நிதிச்சுமை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கும் முடிவை அரசு உடனடியாக மறுஆய்வு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மின்வாரியத்தின் சொந்த உற்பத்தித் திறனைச் சீரமைத்தல், நீண்டகாலத் திட்டங்களை நிறைவேற்றுதல் மற்றும் மாற்று எரிசக்தித் திட்டங்களை விரிவுபடுத்துதல் மூலமாக மட்டுமே தமிழ்நாட்டை மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்ற முடியும் என்றும், அந்த விவரங்களை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
