ஆறுகளில் நுரை பொங்கி வழியும் அவலநிலைக்கும், கழிவுநீர் மாசுபடுவதற்கும் மக்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் ஷாம்புவே காரணம் என சுற்றுச்சூழல் அமைச்சர் கூறிய விளக்கம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் இந்த கருத்தை விமர்சித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். ஆற்றையே மூடும் அளவுக்கு நுரையைத் தள்ளும் அந்த சோப்பு மற்றும் ஷாம்புவின் பெயரை அமைச்சர் மக்களுக்கு உடனடியாக வெளியிட வேண்டும் என்று அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
பொதுமக்கள் பல தலைமுறைகளாகச் சோப்பு போட்டுத்தான் குளித்து வருகிறார்கள் என்றும், ஷாம்பு ஒன்றும் நேற்று சந்தைக்கு வந்த புதிதான பொருள் அல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ள சீமான், மக்களின் அன்றாடப் பழக்கத்தைக் காரணம்காட்டி அரசு தனது பொறுப்பில் இருந்து கை கழுவ முயல்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஆலைக்கழிவுகளும், சாயப்பட்டறைக் கழிவுகளுமே ஆறுகளில் நுரை பொங்குவதற்கு முதன்மைக் காரணம் என்பது ஒரு குழந்தைக்குக் கூடத் தெரியும் என்றும், ஆனால் சுற்றுச்சூழல் அமைச்சருக்கு மட்டும் அது ஆய்வுக்குரிய கேள்வியாகத் தெரியவில்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒருவேளை வீட்டுக் கழிவுநீரால் தான் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது என்றாலும், சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஆறுகளில் நேரடியாகக் கலப்பதைத் தடுக்காதது அரசின் மிகப்பெரிய நிர்வாகத் தோல்வியாகும் எனச் சீமான் சுட்டிக்காட்டியுள்ளார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஊகங்களின் அடிப்படையில் பேசி நேரத்தைக் கடத்தாமல், ஆறுகளில் மாதிரி நீரை எடுத்துப் பரிசோதித்து, அதன் அதிகாரப்பூர்வ ஆய்வறிக்கையை உடனடியாகப் பொதுமக்கள் முன் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, ஆற்றைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் அரசு, மக்கள் குளிப்பதைக் குற்றமாக்கிக் கொண்டிருக்கக் கூடாது என்று சாடியுள்ள சீமான், கழிவுநீர் கலக்கும் வழிகளை உடனடியாக அடைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் சரியாக இயங்குவதை உறுதிசெய்வதோடு, விதிமீறும் தொழிற்சாலைகள் மற்றும் சாயப்பட்டறைகள் மீது தயவுதாட்சணியமின்றிக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அரசை வலியுறுத்தியுள்ளார்.
