தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. சென்னையில் ஆலந்தூர், அம்பத்தூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளைக் கடுமையாகச் சாடினார். குறிப்பாக, வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வழங்கப்படும் 8000 ரூபாய் மதிப்பிலான கூப்பன் திட்டத்தை விமர்சித்த அவர், “இந்த கூப்பனை வைத்து எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என்றால், முதல்வர் பதவியைக் கொடுப்பீர்களா?” என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
திராவிடக் கட்சிகளின் இலவச அரசியலை விமர்சித்த சீமான், கடந்த 60 ஆண்டுகால ஆட்சியில் மக்களை வறுமையிலேயே வைத்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். ஒரு நாளைக்கு 30 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத நிலையில் மக்களை வைத்திருப்பதுதான் இந்த ஆட்சியாளர்களின் சாதனை என்று குறிப்பிட்ட அவர், தேர்தல் நேரத்தில் 2000 அல்லது 8000 ரூபாய் கொடுப்பது வறுமை வளர்ந்துவிட்டதையே காட்டுகிறது என்றார். “கல்வி, தகுதி எதற்கும் மதிப்பில்லை என்றால், நான் கால் கிலோ தங்கம், கார், பெட்ரோல் தருவதாகச் சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா?” என்று வாக்காளர்களிடம் கேள்வி எழுப்பிய அவர், இலவசங்களுக்காக ஓட்டுப் போட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.
கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் குறித்துப் பேசிய சீமான், பல கட்சிகள் தன்னுடன் ரகசிய பேரம் பேசியதாகப் பகிரங்கப்படுத்தினார். குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டு மற்ற இடங்களில் வாபஸ் பெறக் கோரிய கோரிக்கைகளை தாம் நிராகரித்துவிட்டதாக அவர் தெரிவித்தார். “அரை சதவீதம் ஓட்டு வைத்திருப்பவர்களிடம் கூட கூட்டணி பேரம் நடத்தியவர்கள், என்னிடம் எப்படியெல்லாம் பேசியிருப்பார்கள்?” எனக் குறிப்பிட்ட அவர், கொள்கையில் உறுதியாக இருந்து வழக்கம் போல் 117 ஆண்கள் மற்றும் 117 பெண்கள் என 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுவதை உறுதிப்படுத்தினார்.
பெண்களுக்கு வாஷிங் மெஷின், டிவி, பிரிட்ஜ் போன்ற பொருட்களைப் பெற உதவும் 8000 ரூபாய் கூப்பன் திட்டத்திற்கு மக்களிடையே வரவேற்பு இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறி வரும் நிலையில், சீமானின் இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “நல்லாட்சி அமைய சிந்தித்து ஓட்டுப் போடுங்கள், இல்லையென்றால் குவார்ட்டர் குடித்துவிட்டு வீட்டிலேயே படுத்திருங்கள்” எனத் தனது பாணியில் ஆவேசமாக உரையை முடித்தார் சீமான். தமிழகத் தேர்தல் களத்தில் இலவச அறிவிப்புகளுக்கும், கொள்கை அரசியலுக்கும் இடையிலான மோதல் இப்போதே உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
