சேலம் மாவட்டம் ஒதியத்தூர் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலை அமைக்கப்பட்டு, பல ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக மட்டுமன்றி, பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களுக்காகவும் பாடுபட்ட அம்பேத்கரின் சிலையைத் திறப்பதில் சாதிய முரண்பாடுகளைக் காரணம் காட்டித் தாமதிப்பது வேதனைக்குரியது என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், அம்பேத்கரைக் கொள்கைத் தலைவராகக் ஏற்கும் ‘தவெக’ அரசு, இச்சிக்கலைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காமல் வாக்கரசியலுக்காகச் சமரசம் செய்து கொள்கிறதா என்றும் கடுமையான விமரிசனங்களை முன்வைத்திருந்தார்.
சீமானின் இந்த அறிக்கை அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், ஈரோட்டில் நடைபெற்ற அரசு நலத்திட்ட முகாம் ஒன்றில் பங்கேற்ற கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜியிடம் செய்தியாளர்கள் இது குறித்துக் கேள்வி எழுப்பினர். ஆனால், சீமான் எழுப்பிய காரசாரமான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கத் தவறிய அமைச்சர், “சீமான்னா யாரு? அவர் எம்.எல்.ஏ-வா? இல்ல எம்பி-யா?” என்று அலட்சியமாகத் திருப்பிக் கேட்டுவிட்டு, அதுபற்றி மேற்கொண்டு பேசாமல் அங்கிருந்து நழுவிச் சென்றார்.
அமைச்சரின் இந்த எதிர்வினை, அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பொதுவெளியில் எழுப்பப்படும் மக்கள் நலன் சார்ந்த மற்றும் கொள்கை ரீதியான கேள்விகளுக்குப் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டிய ஒரு கேபினெட் அமைச்சர், கேள்வி எழுப்புபவரின் மக்கள் பிரதிநிதித்துவப் பதவியை மட்டும் காரணியாகக் காட்டிப் பதிலைத் தவிர்ப்பது ஜனநாயகப் பண்புகளுக்கு எதிரானது என்ற விமரிசனங்கள் பரவலாக எழும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
சாதிய மோதல்களைத் தவிர்த்து, சட்டம்-ஒழுங்கைப் பாதுகாத்து அம்பேத்கரின் சிலையை முறைப்படி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒருபுறம் வலுத்து வருகிறது. அதேநேரத்தில், எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் இயக்கங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு நேர்மையான பதில்களைத் தராமல், கேள்வி எழுப்புபவரின் தகுதியை மட்டம் தட்டித் தப்பிக்கும் அமைச்சரின் போக்கு, தவெக அரசின் மீது கூடுதல் விமரிசனக் கணைகளை பாயச் செய்துள்ளது.
