பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு மற்றும் பொறுப்புணர்வு குறித்து விஜய் சேதுபதி பேசிய பொதுவான கருத்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை விமர்சிப்பதாகக் கூறி தவெகவினர் அவரைக் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் விஜய் சேதுபதிக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளார்.
இது குறித்துச் சீமான் தனது எக்ஸ் தளத்தில், “தம்பி விஜய் சேதுபதி எந்தக் கட்சியையோ அல்லது நபரையோ சுட்டிக்காட்டாமல் ஒரு விளையாட்டு சூழலை வைத்துப் பொதுவான கருத்தையே கூறினார். அதைத் தங்களது தலைவரோடு பொருத்திப் பார்த்துவிட்டுத் தனிநபரை வசைபாடுவதும், மிரட்டுவதும் ஜனநாயக அரசியலுக்கு அழகல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “அரசியலுக்கு வந்த பிறகு விமர்சனங்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். ‘ஜனநாயகன்’ என்று படம் நடித்தால் மட்டும் போதாது; உண்மையான ஜனநாயகத்தைப் போற்ற வேண்டும். வசையாலும் மிரட்டலாலும் கருத்துரிமையை முடக்க நினைக்காமல் கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள்” என விஜய்க்கும் தவெகவினருக்கும் சீமான் நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
