“பெற்றோர் முன்னிலையிலேயே சுட்டுக்கொல்வேன்” பாலியல் குற்றவாளிகளுக்கு சீமான் விடுத்த பகீர் எச்சரிக்கை..!!

By Soundarya on சித்திரை 15, 2026

Spread the love

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் நச்சுத் தன்மை கொண்ட தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்கப்படாது என்றும், அதற்குப் பதிலாக அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார். மேலும், ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்குக் கண்டிப்பாக அரசு வேலை வழங்கப்படும் என்றும், அரசாங்கம் சார்பிலேயே ஆடு, மாடு மற்றும் கோழிகள் வளர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வேளாண்மை மற்றும் மதுவிலக்கு குறித்துப் பேசிய சீமான், தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்படும் என்றும், அதற்கு மாற்றாகப் பனம்பால், தென்னம்பால் மற்றும் ஈச்சம்பால் ஆகியவை விற்பனை செய்யப்படும் என்றும் கூறினார். விவசாயத்தை மேம்படுத்த ஆடு, மாடு மற்றும் கழுதைப் பண்ணைகள் அமைக்கப்படும் என்றும், அந்தப் பால்களைச் செறிவூட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து லாபம் ஈட்டப்படும் என்றும் விவரித்தார். கரும்பிலிருந்து சர்க்கரை மட்டுமல்லாது பெட்ரோல் மற்றும் பேப்பர் தயாரிக்கும் திட்டங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

   

சட்டம் ஒழுங்கு மற்றும் தண்டனைகள் குறித்துப் பேசிய அவர், “பாலியல் கொடுமைகள் செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும்” என எச்சரித்தார். அத்தகைய குற்றத்தைச் செய்பவனின் பெற்றோர் முன்னிலையிலேயே, “இந்த மகன் உனக்குத் தேவையா?” என்று கேட்டுவிட்டு, அவனை அந்த இடத்திலேயே சுட்டுக்கொல்வேன் என்று அதிரடியாகப் பேசினார். பாலியல் குற்றங்களைத் தடுக்க இத்தகைய கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படும் என்ற அவரது இந்தப் பேச்சு தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.