அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா 65,589 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் வி.பி. துரை 55,344 வாக்குகளும், தவெக சார்பில் ராஜகோபால் 53,611 வாக்குகளும், நாதகவின் சிவசங்கரன் 14,906 வாக்குகளும் பெற்றிருந்தனர். வெறும் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி கைநழுவியதால், இந்த முறை கூட்டணிக்கு ஒதுக்காமல் திமுகவே நேரடியாகக் களமிறங்கி வெற்றிபெற வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறது. மேலும், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இத்தொகுதியில் போட்டியிடுவதால், அவருக்குப் போட்டியாக முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்த திமுக தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
இத்தொகுதியில் பொது வேட்பாளராகப் போட்டியிட சீமான் தரப்பில் திமுக மற்றும் அதிமுகவிடம் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், தவெகவை ஒரு பெரிய சக்தியாக உருவகப்படுத்திவிடக் கூடாது என்பதில் இரு திராவிடக் கட்சிகளுமே உறுதியாக உள்ளன. கூட்டணிக்கு வந்தால் மட்டுமே பரிசீலிக்க முடியும் என்ற நிலையே தொடர்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சிறந்த வேட்பாளர்களைப் பரிந்துரை செய்ய தொகுதி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் பங்கேற்றதைத் தொடர்ந்து, அவருடைய மகன் ஓ.பி.ரவீந்திரநாத் திமுக கூட்டணியில் களமிறக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.
எனினும், வெளிமாவட்டத்தைச் சேர்ந்த ரவீந்திரநாத்தை நிறுத்தினால் “திமுகவில் வேட்பாளரே இல்லையா?” என்ற கேள்வியும், உள்ளூர் நிர்வாகிகளை அனுசரித்துச் செல்வதில் சிக்கலும் எழக்கூடும் என்று கருதப்படுகிறது. மற்றொருபுறம், நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளர் கிரஹாம்பெல் பெயரும் பரிசீலனையில் இருந்தாலும், அவர் ராதாபுரம் மற்றும் நாங்குநேரி பகுதிகளைச் சேர்ந்தவர் என்பதால் அம்பை தொகுதியில் அவருக்குச் செல்வாக்குக் குறைவு எனக் கூறப்படுகிறது. இதனால் கிரஹாம்பெல்லை நிறுத்துவது முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தரப்பிற்கு அதிருப்தியை ஏற்படுத்தலாம் என்பதும் கவனத்தில் கொள்ளப்படுகிறது.
கடந்த 2006-க்குப் பின் மூன்று முறை அம்பை தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ஆவுடையப்பனுக்கு தற்போது வயதாகிவிட்டதால், திமுக தலைமை இளம் வேட்பாளர்களைக் களமிறக்க விரும்புகிறது. அந்த வகையில், அவரது மகன் பிரபாகரனுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்ற பேச்சுகள் வலுத்துள்ளன. உள்ளூரில் நல்ல அறிமுகமும் செல்வாக்கும் கொண்ட பிரபாகரன் களமிறக்கப்பட்டால், அது தவெக மற்றும் பிற எதிர்க்கட்சிகளுக்குக் கடும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி வேட்பாளர் தேர்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் முடிவே முதன்மையான பங்கை வகிக்கும் என்பதால், பிரபாகரன் தற்போது வேட்பாளர் ரேஸில் முன்னணியில் இருக்கிறார்.
