தஞ்சாவூர் சட்டசபை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கிருஷ்ணகுமாரை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் பனகல் கட்டிடம் அருகே தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார். நாம் தமிழர் கட்சிக்கு மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து அவர் விரிவாகப் பேசிக்கொண்டிருந்த நிலையில், தேர்தல் விதிகளின்படி பிரசாரம் செய்வதற்கான காலக்கெடுவான இரவு 10 மணியைக் கடந்தது. 10.12 மணி ஆகியும் சீமான் தனது பேச்சைத் தொடர்ந்ததால், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த தஞ்சாவூர் டிஎஸ்பி சோமசுந்தரம், நேரமாகிவிட்டதைச் சைகை மூலம் சுட்டிக்காட்டி பிரசாரத்தை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
காவல்துறை அதிகாரியின் சைகையை மேடையிலிருந்தே கவனித்த சீமான், தனது கையில் இருந்த கடிகாரத்தைக் காண்பித்து அதைக் கிண்டல் செய்யும் விதமாகப் பேசினார். “நேரம் தவறிவிட்டால் ஒரு வழக்கு வரும், அவ்வளவுதானே? நான் பேசுவது போலீசாருக்காகவும், அவர்களின் பிள்ளைகளுக்காகவும் சேர்த்துதான். சரி, நம்மால் அதிகாரிக்கு நெருக்கடி வேண்டாம்; வழக்கு ஒன்றும் நமக்கு புதிதல்ல” என்று கூறிவிட்டு, வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரசாரத்தை நிறைவு செய்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விதிமீறல் தொடர்பாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி சுரேஷ் குமார் அளித்த புகாரின் அடிப்படையில், தஞ்சாவூர் கிழக்கு போலீசார் சீமான் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேபோல், அந்தத் தொகுதியின் வேட்பாளர் கிருஷ்ணகுமார் மீதும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்குப் பாய்ந்துள்ளது. வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரசாரம் சூடுபிடித்துள்ள சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் தனித்துப் போட்டியிடுகிறது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் சரிபாதி ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வாய்ப்பளித்துள்ள சீமான், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் நேரடியாகக் களம் காண்கிறார். தனது சொந்த மாவட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் அவர் தீவிரமாகச் சுழன்று வரும் வேளையில், தஞ்சாவூர் பிரசார விவகாரம் மற்றும் அதன் மீதான வழக்கு அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாகியுள்ளது.
