“ஹார்முஸ் கடலில் ஓடுவது ரத்த ஆறா?”… சமூக வலைதளங்களை அதிர வைக்கும் திகில் வீடியோ… பீதியில் உலக நாடுகள்… கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே….!

By Nanthini on சித்திரை 13, 2026

Spread the love

வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் கடல் நீர் ரத்தச் சிவப்பாக மாறியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான மோதல் உச்சத்தில் இருப்பதால், இது போரினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் விளைவோ என்று பலரும் சமூக வலைதளங்களில் அச்சம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், உண்மையில் இந்த “சிவப்பு கடல்” காட்சிக்கும் போருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுதான் நிதர்சனம்.

பாரசீக வளைகுடாவில் உள்ள ஹார்முஸ் தீவு, அதன் தனித்துவமான புவியியல் அமைப்பிற்குப் பெயர் பெற்றது. இந்தத் தீவின் மண்ணில் ஹேமடைட் (Hematite) எனப்படும் இரும்பு ஆக்சைடு தாது மிக அதிக அளவில் காணப்படுகிறது. செவ்வாய்க் கிரகத்தின் நிறத்திற்குப் பின்னால் இருக்கும் அதே வேதியியல் காரணிதான் இங்கும் உள்ளது. இதன் காரணமாகவே இந்தத் தீவு “பாரசீக வளைகுடாவின் வானவில் தீவு” என்று உலகப் புகழுடன் அழைக்கப்படுகிறது.

   

சமீபத்தில் பெய்த கனமழையின் போது, அங்குள்ள குன்றுகளில் இருந்து மழைநீர் செந்நிற மண்ணை அடித்துக் கொண்டு வந்து கடலில் சேர்த்துள்ளது. இந்த மண் அரிப்பினால் கடல் நீர் அடர் சிவப்பு நிறமாக மாறி, பார்ப்பதற்கு ரத்த ஆறு ஓடுவது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறது. பல ஆண்டுகளாக மழைக்காலங்களில் நிகழும் இந்த வியக்கத்தக்க இயற்கை நிகழ்வை, தற்போதைய போர் சூழலோடு தொடர்புபடுத்தி பழைய வீடியோக்கள் இப்போது மீண்டும் வைரலாகி வருகின்றன.

   

இயற்கையின் இந்த விசித்திரமான நிறமாற்றம் அப்பகுதி மக்களுக்குப் பழக்கப்பட்ட ஒன்றுதான். அங்குள்ள சிவந்த மண்ணை மக்கள் உணவுகளில் சுவையூட்டியாகவும், வணிக ரீதியாகவும் பயன்படுத்தி வருகின்றனர். வளைகுடாவில் அரசியல் ரீதியாகப் போர் மேகங்கள் சூழ்ந்திருந்தாலும், ஹார்முஸின் இந்த “சிவப்பு அழகு” என்பது இயற்கையின் ஒரு அபூர்வமான புவியியல் அதிசயம் மட்டுமே தவிர, பேரழிவின் அடையாளம் அல்ல.