செகந்திராபாத் பொல்லாராம் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்த வேளாண் விஞ்ஞானியின் ஐந்து வயது மகள் மர்மமான முறையில் கடத்தப்பட்டு, அதே வளாகத்தின் கிளப்ஹவுஸ் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த விக்ரம் என்பவர், அச்சிறுமியைப் பின்தொடர்ந்து சென்ற காட்சிகள் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளன. குழந்தையை விடுவிக்க ரூ. 20 லட்சம் பிணைப்பணம் கேட்டு மிரட்டிய நிலையில், அவரே இக்கொலையைச் செய்திருக்கலாம் எனப் போலீசார் கருதுகின்றனர்.
தலைமறைவாகியுள்ள குற்றவாளியைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. செகந்திராபாத் ரயில் நிலையம் அருகே அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதைக் கண்டறிந்த காவல் துறையினர், அப்பகுதியில் உள்ள விடுதிகள் மற்றும் தங்கும் விடுதிகளில் சோதனையிட்டு வருகின்றனர். இரவில் ட்ரோன் கேமராக்கள் மூலமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குற்றத்தின் பின்னணி குறித்து முழுமையான விசாரணை தொடர்ந்து நடக்கிறது.
