உத்தரப் பிரதேச மாநிலம் தேவரியா மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட ‘திரங்கா யாத்திரை’ பேரணியில் பங்கேற்ற 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கமடைந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
மாணவிகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்களும் அதிகாரிகளும், உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை மகரிஷி தேவராஹா பாபா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவிகளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் சென்று அவர்களின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்தனர்.
https://twitter.com/Benarasiyaa/status/2087936529398460559/video/1
காலை முதல் எதுவும் சாப்பிடாமல் இருந்ததும், சுட்டெரிக்கும் கடும் வெயிலில் நீண்ட தூரம் நடந்ததால் ஏற்பட்ட நீர்ச்சத்து குறைபாடே மாணவிகள் மயக்கமடையக் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். சரியான நேரத்தில் முதலுதவி மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டதால் மாணவிகள் அனைவரும் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
