பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வந்த பிரியா பாரதி (30) என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாள் உடல்நலக் குறைவால் மனமுடைந்த அவர், தனது வாடகை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன்னதாக அவர் எழுதிய உருக்கமான கடிதத்தில், தனது மரணத்திற்கு யாரும் காரணமல்ல என்றும், தனது உடலைத் கணவர் வீட்டிற்கு எடுத்துச் செல்லாமல் அங்கேயே தகனம் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், தனது மூன்று மாதக் குழந்தையே தனக்கு இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என்றும், தனது கணவர் செய்யக்கூடாது என்றும் அவர் விருப்பம் தெரிவித்தது பலரையும் நெகிழச் செய்துள்ளது.
அவரது தற்கொலை கடிதத்தில் மற்றொரு முக்கிய அம்சமாக, தான் வாங்கிய 5.5 லிட்டர் பாலுக்கான நிலுவைத் தொகையை தனது பையில் உள்ள பணத்திலிருந்து செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இறக்கும் தருவாயிலும் நேர்மையுடன் அவர் எழுதிய இக்கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரியாவின் மரணம் தற்கொலை என்று கடிதம் கூறினாலும், அவரது குடும்பத்தினர் கணவர் மற்றும் புகுந்த வீட்டினர் மீது வரதட்சணை மற்றும் கொடுமைப் புகார்களை சுமத்தியுள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், பிரியாவின் செல்போனில் உள்ள தரவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
