தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பெய்துவரும் மழையை ஒட்டி பள்ளிகளுக்கு விடுமுறை கேட்டு பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர்களின் சமூக வலைதளப் பக்கங்களை முற்றுகையிட்ட சுவாரசியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. மழையைக் கண்டாலே பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருக்க விரும்பும் ஜென்-ஜி மாணவர்கள், சமூக வலைதளங்கள் மூலம் மாவட்ட ஆட்சியர்களைச் செல்லமாக மிரட்டியும், உரிமையோடு கோரிக்கை விடுத்தும் வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பிரதாப்பை இன்ஸ்டாகிராமில் டேக் செய்த மாணவர்கள் சிலர், “சார்.. நீங்களும் ஒருகாலத்தில் மாணவர் தானே, எங்களது வலி உங்களுக்குப் புரியாதா? ப்ளீஸ் லீவ் விடுங்க” என்று சென்டிமென்டாகக் கோரிக்கை விடுத்தனர். ஆனால், மழையின் அளவைக் கணக்கிட்டு விடுமுறை அளிக்க மறுத்த கலெக்டர் பிரதாப், மாணவர்கள் அனுப்பிய அந்தச் செய்திகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்து, பின்னணியில் சோகமான இசை சேர்த்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ரீல்ஸ்’ வீடியோவாகப் பகிர்ந்து மாணவர்களுக்குக் கலகலப்பான பதிலடி கொடுத்துள்ளார்.
இதேபோல் நெல்லை மாவட்டத்திலும், கனமழை காரணமாகப் பள்ளி விடுமுறை கோரி மாணவர்கள் கலெக்டர் ஆனந்த் மோகனின் வாட்ஸ்-அப் எண்ணுக்குக் குறுஞ்செய்திகளைத் தட்டினர். அதில் ஒரு மாணவர் “விடுமுறை விட்டால் மட்டுமே உங்கள் மீது அக்கறை உண்டு” என்றும், மற்றொரு மாணவர் செல்லமாகக் கண்டித்தும் அனுப்பிய செய்திகள் இணையத்தில் வைரலாகின. ஒரு காலத்தில் செய்திகளுக்காகக் காத்திருந்த மாணவர்கள், இன்று நேரடியாக ஆட்சியர்களின் சமூக வலைதளப் பக்கத்திற்கே சென்று ‘லீவ்’ கேட்கும் இந்த புதிய ட்ரெண்ட் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.
