“கிங்ஸ் ஆப் ஸ்கூல்” – இன்ஸ்டாகிராம் போஸ்ட்டால் வந்த வினை…. சீனியர்களின் ஈகோ மோதலில் பலியான 18 வயது இளைஞன்…..!

By Nanthini on பங்குனி 3, 2026

Spread the love

கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த திருப்பதி என்பவரது மகன் மனோஜ் (18), பிளம்பிங் மற்றும் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி இரவு, மனோஜ் தனது நண்பர்களுடன் புரோட்டா கடை அருகே பேசிக்கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் அவர்களைக் கொலை செய்ய முயன்றது. தப்பியோடியபோது கால் தவறி கீழே விழுந்த மனோஜை, அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனோஜ், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தக் கொலைக்கான பின்னணி குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. அங்குள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், “Kings of our School” என்ற வாசகத்துடன் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த அதே பள்ளியின் 11-ஆம் வகுப்பு மாணவர்கள், “சீனியர்களான நாங்கள் இருக்கும்போது, ஜூனியர் நீங்கள் எப்படி ‘கிங்’ எனப் பதிவிடலாம்?” என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சிறுபிள்ளைத்தனமான மோதல் நாளடைவில் இரு தரப்புக்கும் இடையிலான பெரும் பகையாக மாறியுள்ளது.

   

மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட இந்தத் தகராறில், ஒரு தரப்பினருக்கு ஆதரவாக மனோஜ் தலையிட்டுப் பேசியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த எதிர் தரப்பினர், மனோஜைப் பழிவாங்கத் திட்டம் தீட்டி இந்தத் துயரச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட ஒரு சாதாரணப் பதிவும், “யார் பெரியவர்?” என்ற ஈகோ மோதலும் ஒரு இளம் உயிரைப் பறிக்கும் அளவிற்குச் சென்றிருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

   

இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் தொடர்புடைய குமார் (24), முனியசாமி (19), நெல்லையப்பன் (22) மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் என மொத்தம் 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மற்ற நபர்களை போலீஸார் வலைவீசித் தேடி வருகின்றனர்.