வங்க கடலில் நாளை உருவாகும் என்று கணிக்கப்பட்டிருந்த MonTha புயல் முன்கூட்டியே இன்று மாலை 5.30 மணிக்கு புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் சற்று முன் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இது நாளை மறுநாள் காலை தீவிர புயலாக வலுப்பெற்று அன்று மாலை அல்லது இரவு ஆந்திராவின் மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக முதல் மாவட்டமாக புதுச்சேரியின் ஏனாமிர்க்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
