அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் 5 லட்சம் மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய இலவச சைக்கிள்களை வழங்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்ட மாடல்களை விட எடை குறைவாகவும், அதே நேரத்தில் கூடுதல் உறுதியுடனும் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இரவிலும் போதிய வெளிச்சமில்லாத நேரங்களிலும் ஒளிரும் பிரதிபலிப்பு (Reflector) ஸ்டிக்கர்கள் முன்பகுதியிலும் பின்பகுதியிலும் ஒட்டப்பட உள்ளன. மேலும், மேம்படுத்தப்பட்ட பிரேக் சிஸ்டம், பள்ளிப் பைகளை எளிதாக வைத்து எடுத்துச் செல்லக்கூடிய பெரிய கேரியர், தண்ணீர் பாட்டில் மற்றும் புத்தகங்களை வைப்பதற்கான சிறப்பு வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
மாணவர்களின் ரசனைக்கேற்ப மாணவர்களுக்கு ராணுவப் பச்சை நிறத்திலும், மாணவியருக்கு வெளிர் ஊதா நிறத்திலும் இந்தச் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன. வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் சைக்கிள் வழங்கும் பணியைத் தொடங்க முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில், இதற்கான கொள்முதல் பணிகளைப் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காகக் கோரப்பட்டிருந்த ‘டெண்டர்’ விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் தற்போது அக்டோபர் 13-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் அன்றாடப் பயணத்தை எளிதாகவும் பாதுகாப்பாகவும் மாற்றும் நோக்கில் அறிமுகப்படுத்தப்படும் இந்த நவீன சைக்கிள்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
