அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள போல்க் கவுண்டி பகுதியில், விண்டர் ஹேவன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 37 மாணவர்களுடன் சென்ற பள்ளிப் பேருந்து மீது எதிரே வந்த செவ்ரோலெட் கார் திடீரென மோதியது. இந்த மோதலின் பலத்தால் பேருந்தின் சக்கரம் கழன்று ஓடி, எதிரே வந்த மற்றொரு ஜீப் வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதிப் பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில், அன்றைய தினம் தனது முதல் ‘சீயர்லீடிங்’ பயிற்சிக்கு ஆர்வமுடன் சென்ற அடினா லூஸ் (16) என்ற மாணவியும், ஜீப்பை ஓட்டி வந்த தேஷான் ஸ்மித்(26) என்பவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பேருந்திற்குள் சிக்கிய அடினா லூஸைக் காப்பாற்ற சக மாணவர்கள் நால்வர் போராடியதாகவும், ஒரு மாணவன் அவரது கைகளைப் பிடித்துக்கொண்டு கடைசி வரை உடன் இருந்ததாகவும் காவல் துறை அதிகாரி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். படுகாயமடைந்த பல மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
